இவ்வளவு பணமா...? பெரிய 'லாரி' தான் கொண்டு வரணும் போலையே...! - அதிர்ந்து போன அதிகாரிகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேசத்தில் நடைபெற்ற இன்கம்டாக்ஸ் ரைடில் இதுவரை இல்லாத அளவிற்கு பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கனூஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் பியுஷ் ஜெயின். பியுஷ் 'தில் ஓடோகெம் இண்டஸ்ட்ரீஸ்' என்ற பெயரில் வாசனை திரவியங்கள் தயாரிப்பு ஆலையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் வருமான வரிதுறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் இவரது தொழிற்சாலையில் ரூ. 5 கோடியும், கான்பூரில் உள்ள இவரது வீட்டில் ரூ. 5 கோடியும் கைப்பற்றப்பட்டது. அதோடு ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரொக்க தொகை ரூ.187.45 கோடியாகும். ஒரு நிறுவனத்தில் கணக்கில் காட்டாமல் இவ்வளவு பணமா என இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பணம் மட்டுமல்லாமல் கணக்கில் காட்டப்படாத மூலப் பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்கள் உள்ளிட்டவையும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. பல கோடி ருபாய் மதிப்புள்ள சந்தனமர எண்ணெய், பல கோடி ரூபாய் மதிப்பிலான வாசனை திரவியங்களும் ஜெயின் ஆலையிலிருந்து கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுக்குறித்து பியுஷ் ஜெயினிடம் விசாரணை நடத்தியதில் வீடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் அனைத்தும் தனது உறவினர்கள் மற்றும் சகோதரர்களினுடையது என தெரிவித்துள்ளார். இதனால் முதலில் குழப்பம் நிலவியது. ஆனால், பியுஷ் குறிப்பிட்ட உறவினர்கள் மற்றும் சகோதரர்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது பல தகவல்கள் வெளிவந்தன. அந்த விசாரணையில் உறவினர்கள் அது தங்கள் பணம் அல்ல என்று கூறிவிட்டனர்.
பியுஷ் ஜெயினின் சகோதரர் கூட பறிமுதல் செய்த பணத்திற்கு உரிமை கோரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கான்பூரில் உள்ள வாசனை திரவிய விற்பனையகத்திலிருந்து மட்டும் ரூ. 177.45 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வளவு பெரிய பணம் கைப்பற்றப்பட்டது அங்கிருந்த அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுவரை இந்தியாவில் மறைமுக வரித்துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில் மிக அதிக அளவில் ரொக்கம் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜிஎஸ்டி-யின் புலனாய்வுப் பிரிவு இந்த சோதனையை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்