70 கி.மீ வீசப்பட்ட உடல்.. 8 ஆண்டுகளுக்கு பின்...காதலனை கைதுசெய்த போலீஸ்.. மனைவி தலைமறைவு!
முகப்பு > செய்திகள் > இந்தியா8 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் காணாமல் போன ரவி என்பவரது வழக்கில், தற்போது பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
டெல்லியை சேர்ந்த ஜெய் பகவான் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது மகன் ரவியைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். புகார் கொடுத்து சில வருடங்கள் ஓடியபின்னும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் அப்படியே இருந்தது. இதையடுத்து ஜெய் பகவான் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். அதன் பின்னர் இந்த வழக்கு சூடு பிடித்தது.இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பம் இந்த வழக்கில் ஏற்பட்டுள்ளது. அதன்படி ரவியைக் கொலை செய்ததாக அவரது மனைவியின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
2010-ம் ஆண்டு ரவி கட்டிட வேலைக்கு சென்றபோது ஆல்வார் பகுதியை சேர்ந்த சகுந்தலா என்பவரைக் பார்த்துள்ளார். அவருக்கு பிடித்துப்போனதால் தமது குடும்பத்தினருடன் சென்று பெண் கேட்டுள்ளார். சகுந்தலா வீட்டினரும் ஒப்புக்கொண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமான சில வாரங்களிலேயே ரவி காணாமல் போனார். கடைசியாக சகுந்தலாவுடன் போகும் போது ரவி காணாமல் போனதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. அதேபோல ரவி காணாமல் போன 1 வருடத்திலேயே கமல் என்பவரை சகுந்தலா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் போலீசாரின் சந்தேக வளையம் கமல்-சகுந்தலா மீது விழுந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கமல் தான் கொலையாளி என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு கமல் காணாமல் போனார். தற்போது மீண்டும் அவரைக் கைதுசெய்துள்ள காவல்துறை இந்த வழக்கு தொடர்பான முடிச்சுகளை அவிழ்த்துள்ளது. அதன்படி திருமணத்துக்கு முன் கமல்-சகுந்தலா இருவரும் காதலித்துள்ளனர். ஆனால் சகுந்தலா வீட்டினர் இவர்கள் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் ரவி பெண் கேட்டுவர சகுந்தலாவை, ரவிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆனாலும் கமலை, சகுந்தலாவால் மறக்க முடியவில்லை.
இதனைத்தொடர்ந்து கல்யாணமான சில வாரங்களில் கமல்-சகுந்தலா இருவரும் ரவியை திட்டமிட்டு காரில் அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.போகும் வழியில் சகுந்தலா பாதி வழியில் இறங்கிக்கொள்ள கமல்,ரவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, ஆல்வார் பகுதியில் புதைத்துள்ளார். இதற்கு கார் டிரைவரும் உடந்தையாக இருந்துள்ளார். ரவியின் தந்தை போலீசில் புகார் செய்ததால் மாட்டிக்கொள்வோம் என பயந்து போன கமல், ரவியின் உடலை தோண்டியெடுத்து துண்டு-துண்டாக வெட்டி சில பாகங்களை எரித்தும், மீதியுள்ள பாகங்களை ஆல்வார்-ஹரியானா சாலையிலும் சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்துக்கு வீசியுள்ளார்.
தற்போது கமல், கார் டிரைவர் இருவரையும் கைது செய்துள்ள காவல்துறை விரைவில் தலைமறைவாக இருக்கும் சகுந்தலாவும் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.