'ஆந்திராவில் எபிலெப்ஸி!'.. 'புதிய ரக கொரோனா!'.. 'இப்போ கடவுளின் தேசத்தில் பரவும் இன்னொரு நோய்!'.. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடெங்கும் புதிய ரக கொரோனா பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், `ஷிகல்லா (Shigella)' என்கிற பாக்டீரியா கேரளாவில் பரவி வருவதால் அம்மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குடல் அழற்சியை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த நோயால், கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கோட்டாம்பறம்பு பகுதியைச் சேர்ந்த சிறுவன் மரணமடைந்ததை அடுத்து, அந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 6 பேருக்கும் ஷிகல்லா பரவியது. இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட எலுமிச்சை ஜூஸ் மூலமாக பாக்டீரியா பரவியதாக கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை கம்யூனிட்டி மெடிசின் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த பாக்டீரியா எப்படி கோழிக்கோட்டிற்கு வந்தது என தெரியவில்லை. இதுவரை கோழிக்கோட்டில் 52 பேருக்கு ஷிகல்லா பாக்டீரியா அறிகுறிகள் உள்ளது.
இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் இதுபற்றி பேசும்போது, “கேரளாவில் இந்த ஷிகல்லா பாக்டீரியா இதற்கு முந்தைய வருடங்களின் சில பகுதிகளில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அசுத்தப்படுத்தப்பட்ட தண்ணீர், உணவு ஆகியவற்றின் மூலம் ஷிகல்லா, ஈக்கோளி ஆகிய பாக்டீரியாக்கள், பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. மக்கள் பொதுவாகவே தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனால் மக்கள் தொகை பெருகிவிட்டதால், தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிக்கத் தவறினால் இந்த பாக்டீரியா பரவலுக்கு வாய்ப்பு ஏற்படும். இந்த ஷிகல்லா பாக்டீரியா பரவலை அறிந்ததுமே சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை மேற்கொண்டு வருகிறது. கிணறுகளில் சூப்பர் குளோரினேஷன் செய்யப்பட்டுள்ளது.
எனவே சுகாதாரத்துறை கூறும் எல்லா வழிமுறைகளையும் கடைபிடியுங்கள். குழந்தைகளுக்கு இந்த பாக்டீரியா அதிகமாகப் பரவுவதாக சொல்லப்படும் நிலையில், சிலர் சிகிச்சையில் உள்ளனர். சிலரது மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஆக, அதிகமானோர் சேர்ந்து வாழும் பகுதியில் மக்கள் கொதிக்க வைத்த நீர், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளுடன் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆந்திராவில் எலுரு பகுதியில் ‘எபிலெப்சி’ எனும் நோய்த் தாக்கத்தால் 200க்கும் மேற்பட்ட மக்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மயங்கி விழுந்தனர். ஒருவர் உயிரிழந்தார். தவிர, கொரோனா தாக்கத்தால் ஏற்கனவே தடுப்பு முறைகளை நாம் பின்பற்றி வரும் நிலையில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புதிய ரக வடிவ மாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மற்ற செய்திகள்