'செல்போனை ஓவரா யூஸ் பண்ணுவீங்களா'?... அப்போ உங்களுக்கு 'கொம்பு முளைக்கும்' ... அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசெல்போன் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. செல்போன் இல்லை என்றால், ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு தான் பலருக்கும். ஆனால் அது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள பயன்படும் ஒரு நல்ல கண்டுபிடிப்பு தான். அதற்கு அடிமையாகும் போது தான், அதில் பல பிரச்சனைகள் எழுகின்றன. அது போன்ற ஒரு பகீர் தகவல் தான் தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.
செல்போனை அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்தி வந்தால், தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் 'கொம்பு போன்ற கூர்மையான எலும்பு' ஒன்று வளர்வதாக விஞ்ஞானிகள்தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள். தற்போது எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் முதல் பலரும் தலையை குனிந்தவாறே செல்போனை பயன்படுத்தி கொண்டு செல்வதை காண முடியும். அதிலும் குறிப்பாக இளம் பருவத்தினர் அதிகமாக செல்போன் கேமிற்கு அடிமையாகி உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் எச்சரிக்கை மணி அடிப்பது போன்று இந்த ஆய்வு அமைந்துள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ''அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்துவதால் தலையின் முழு எடையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்கிறது. எனேவ தசை நார்கள் வளர்கின்றன. இதன் காரணமாக தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்கிறது'' என தெரிவித்துள்ளார்கள். இது பல உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு இட்டு செல்லும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.