எய்ட்ஸை தோற்கடித்து தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த இளைஞர்.. காதல் தோல்வியால் எடுத்த சோக முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துவந்த இளைஞர் ஒருவர் காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பலரையும் கலங்க வைத்திருக்கிறது.
கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்கள் சாண்டி - மேரி தம்பதி. இவர்களுக்கு எய்ட்ஸ் இருந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு பென்சன் என்ற மகனும் பென்ஸி என்ற மகளும் பிறந்தனர். இவர்களுக்கும் எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் இந்த இரு குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க முடியாமல் சாண்டி - மேரி தம்பதி தவித்துவந்தனர்.
குழந்தைகளுக்கு எய்ட்ஸ் இருப்பதை காரணம் காட்டி சேர்த்துக்கொள்ள பல பள்ளி நிர்வாகங்கள் மறுத்துவிட்டன. இந்த பிரச்சனை பெரிதாகவே, அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் இரு குழந்தைகளையும் சந்தித்து அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். இதன் காரணமாக பென்சன் மற்றும் பென்ஸி ஆகிய இருவரும் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது.
அடுத்தடுத்து ஏற்பட்ட சோகம்
குழந்தைகளை கஷ்டப்பட்டு படிக்கவைத்து வந்த சாண்டி கடந்த 1997 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதன்பிறகு 2000 ஆம் ஆண்டு மேரியும் உயிரிழந்தார். இதனால் இரு குழந்தைகளும் தனது பாட்டி சாலிக்குட்டி என்பவரது அரவணைப்பில் வாழ்ந்துவந்தனர். இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு பென்சியும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்திருக்கிறார்.
இருப்பினும் தனது வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழ்ந்துவந்தார் பென்சன். அவருக்கு ஆறுதலாக இருந்த பாட்டி சாலிக்குட்டியும் இறந்துபோகவே மனம் உடைந்த பென்சனுக்கு ஆறுதலாக ஒரு காதல் கிடைத்திருக்கிறது.
காதல்
அம்மா, அப்பா, சகோதரி, பாட்டி என அனைவரையும் இழந்த பென்சன் தனது வாழ்க்கையின் ஒரே பிடிப்பாக காதலை கருதியிருக்கிறார். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த காதலும் முறிந்திருக்கிறது. இதனால் தனிமையில் வாடிய பென்சன் உயிரை மாய்த்துக் கொண்டார். பல தடைகளை தாண்டி வாழ்ந்துவந்த பென்சன் காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மற்ற செய்திகள்