விஸ்வரூபமெடுக்கும் ஹிஜாப் விவகாரம்..3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..
முகப்பு > செய்திகள் > இந்தியாஹிஜாப் விவகாரத்தையொட்டி கர்நாடகாவில் அனைத்து உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
ஹிஜாப் விவகாரம்
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர். ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, காவித் துண்டுகள் அணிந்து ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் வலம் வரும் மாணவர்களுக்கு பதிலடியாகவும், முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாகவும் நீலத் துண்டு அணிந்து ஜெய் பீம் கோஷத்துடன் சில மாணவர்கள் வலம் வந்தனர்.
இந்த விவகாரம் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது என பல்வேறு அமைப்புகள் கண்டனக்குரல் எழுப்பிவந்தன.
இன்று காலை பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து தனியாக மாணவி ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். அப்பெண்ணும் அம்மாணவர்களுக்கு எதிராக ”அல்லாஹு அக்பர்” என்று குரல் எழுப்பியபடி தன் பாதையில் நடந்தார். உடனே கல்லூரி ஊழியர்கள் வந்து அப்பெண்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
முதல்வர் அறிவிப்பு
இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், “மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கர்நாடக மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்