'ரஜினி ஸ்டிக்கரால் சிக்கிய கொலையாளி'... 'அதிரவைத்த ஆட்டோ டிரைவர்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆட்டோவில் ஒட்டப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் ஸ்டிக்கரால், கொலையாளி ஒருவனை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

'ரஜினி ஸ்டிக்கரால் சிக்கிய கொலையாளி'... 'அதிரவைத்த ஆட்டோ டிரைவர்'!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர், 45 வயதான போந்திலி நிர்மலா பாய். இவர், அதேப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அலுவலகப் பணியாளராக வேலை செய்துவருகிறார். நிர்மலாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். மகன் ஹைதராபாத்தில் வேலை செய்துவருகிறார். மகள் திருப்பதியில் படித்து வருகிறார். நெல்லூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் நிர்மலா மட்டும் தனியாக வாழ்ந்துவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் நிர்மலாவின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் நிர்மலா எரிந்துகிடந்தார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பாலாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், நிர்மலா கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.  'நிர்மலாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், அவரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட தடயம் இருந்தது.

கொலை உறுதி செய்யப்பட்டவுடன், அவரை யார் கொலை செய்தார் என்ற தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் களமிறங்கினர்.நிர்மலாவின் வீட்டுப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை சோதனை செய்தபோது, அதில் அவர் கொலை செய்யப்பட்ட அதே நேரத்தில், சந்தேகத்திற்கிடமான ஆட்டோ ஒன்று வந்துசெல்வது கண்டறியப்பட்டுள்ளது. அதில், நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இதை அடையாளமாகவைத்து, நெல்லூர் முழுவதும் உள்ள சுமார் 10,000 ஆட்டோக்களை சோதனை செய்தும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் காவலர்கள் திணறினர். இறுதியாக திங்கள்கிழமையன்று, நெல்லூர், முத்துகூர் சாலைப் பகுதியில் ஒரு ஆட்டோ, ரஜினி ஸ்டிக்கர் ஒட்டியபடி நிற்பதைப் பார்த்து குற்றவாளியை காவல் துறையினர் பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், ஆட்டோ டிரைவர் ராமசாமி, கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதில், 'நிர்மலா பாய் தனியாக வீட்டில் வசித்துவந்ததை அறிந்த ஆட்டோ ஓட்டுநர், யாரும் அறியாத நேரத்தில் அவரது வீட்டில் புகுந்துள்ளார். பின்னர் அவரை கத்தியால் குத்திக் கொலைசெய்துவிட்டு, அவரது வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டுள்ளார். நிர்மலாவின் கொலையை விபத்துபோல் செய்வதற்காக, அவரின் வீட்டில் உள்ள பழைய பேப்பர்களின் உதவியுடன் உடலை எரித்துவிட்டு சிலிண்டரையும் திறந்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிஓடியுள்ளார்'. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MURDER, RAJINISTICKER, AUTODRIVER