6 மணி நேரத்துல இவ்வளவு முட்டையா?.. கேரளாவில் நடந்த அதிசயம்.. வியந்துப்போன கால்நடை மருத்துவர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தில் ஒரு கோழி 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டு பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. இதனால் அந்த ஊர் மக்கள் ஆச்சர்யத்துடன் அந்த கோழியை பார்த்து செல்கின்றனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே புன்னப்புரா பகுதியைச் சேர்ந்தவர் பிஜு குமார். இவர் எட்டு மாதங்களுக்கு முன்பு வங்கியில் கடன் பெற்று பிவி 380 என்ற இனத்தைச் சேர்ந்த 25 கோழி குஞ்சுகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினார். இப்போது இந்த கோழிகள் முட்டை இட்டு வருகின்றன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த கோழிகளில் ஒன்று சோர்வாக இருந்திருக்கிறது. இதனையடுத்து அதை மட்டும் தனிமைப்படுத்தி இருக்கிறார் குமார். நோய்வாய்ப்பட்டு இருக்கலாமென அச்சப்பட்ட அவர் தரையில் சாக்கை விரித்து அதன்மீது கோழியை விட்டுள்ளார். குமாரின் மகள் தேவிப்பிரியா அந்தக் கோழிக்கு 'சின்னு' என பெயரிட்டு இருக்கிறார்.
அதிசயம்
இந்நிலையில், ஒரு காலை இழுத்து நடந்த கோழிக்கு வலி நிவாரண தைலத்தை தடவி இருக்கிறார் குமார். அதன்பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி அளவில் இந்த கோழி முட்டை இட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து அந்தக் கோழி முட்டைகளை இட குமாரின் குடும்பம் திகைத்துப்போய் இருக்கிறது. மதியம் 2:30 வரையில் முட்டை போட்டுக்கொண்டிருந்த கோழி மொத்தமாக 24 முட்டைகளை இட்டிருக்கிறது. இது பலரையும் வியப்படைய செய்ததுடன் அந்த கிராம மக்களை குமாரின் வீட்டிற்கு வந்து அந்தக் கோழியை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
ஆராய்ச்சி
மேலும் 24 முட்டைகளை இட்ட பின்னரும் கோழி ஆரோக்கியத்துடனேயே இருந்ததாக கூறிய குமார் அனைத்து முட்டைகளும் வழக்கமான அளவிலேயே இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் கேரள மாநிலத்தின் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் நேரில் சென்று சின்னு என்ற இந்த கோழியை பார்வையிட்டு இருக்கின்றனர். இதுபற்றி கால்நடை ஆராய்ச்சியாளர்கள் பேசுகையில் "இது மிகவும் அரிதான சம்பவம். கோழி ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக தொடர்ந்து முட்டை போட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் இப்படி நடந்ததற்கு சரியான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள இந்த கோழியை ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன் பின்னரே இந்த கோழி எப்படி 24 முட்டைகளை இட்டது என்பது தெரிய வரும்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
கேரளாவில் 6 மணி நேரத்தில் ஒரு கோழி 24 முட்டைகளை இட்டது பலரையும் திகைப்படைய வைத்திருக்கிறது
மற்ற செய்திகள்