சார் நான் 'சட்டத்தை' மதிக்கிறவன்..எத்தனையோ 'கடை' ஏறி-எறங்கிட்டேன் ஹெல்மெட் கெடைக்கல!
முகப்பு > செய்திகள் > இந்தியாமோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தபின்னர் நாடு முழுவதும் ஏராளமானோருக்கு,போலீசார் அபராதம் விதிக்கும் செய்திகளே பிரதான இடம்பிடித்து வருகின்றன.சில இடங்களில் வாகனங்கள் வாங்கப்பட்ட விலையை விட, விதிக்கப்படும் அபராதம் மிகவும் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் ஹெல்மெட் போடாததற்கு ஒருவர் சொன்ன காரணம் கேட்டு, போலீசார் அபராதம் விதிக்காமல் அவரை விடுவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஜாகீர் மாமோன் என்னும் நபர் ஹெல்மெட் போடாமல் வந்துள்ளார். அவரை நிறுத்தி விசாரித்த போலீசார் அவருக்கு அபராதம் விதிக்க தயாராகினர்.அப்போது அவர்,''சார் அவசரப்படாதீங்க.நான் சட்டத்தை மதிக்கிறவன். ஆனா என் தலைக்கு ஏத்த ஹெல்மெட் கெடைக்கல.நானும் எத்தனையோ கடை ஏறி எறங்கிட்டேன்.
ஆனா எனக்கு ஏத்த மாதிரி ஹெல்மெட் எந்த கடையிலும் இல்ல.வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்கிட்ட இருக்கு. இந்த ஹெல்மெட் விஷயத்தில மட்டும் என்னால எதுவுமே செய்ய முடியவில்லை,'' என்று கூறியிருக்கிறார்.அவர் சொன்னதற்கு ஏற்ப அவரது தலையின் அளவும் பெரிதாக இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவருக்கு அபராதம் எதுவும் விதிக்காமல் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. பழக்கடை வைத்திருக்கும் ஜாகீர் தினமும் வீட்டில் இருந்து கிளம்பும்போது, அபராதத்துக்கும் சேர்த்து பணம் எடுத்துக்கொண்டு தான் வீட்டைவிட்டு வெளியில் வருவாராம் என்பது குறிப்பிடத்தக்கது.