'தண்ணீரில் கடவுளின் தேசம்'... 'கேரளாவை உலுக்கியெடுத்த நிலச்சரிவு'... '80 பேரின் கதி என்ன'?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் கனமழையால் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

'தண்ணீரில் கடவுளின் தேசம்'... 'கேரளாவை உலுக்கியெடுத்த நிலச்சரிவு'... '80 பேரின் கதி என்ன'?

தென் மேற்கு பருவமழையை முன்னிட்டு கேரளாவில் கடும் மழை பெய்துவருகிறது. இதனால் கேரளாவில் பலபகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 70 முதல் 80 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதிகாரிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் நிலச்சரிவில் சிக்கிய 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில், ''இடுக்கியின் ராஜமலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, காவல்துறையினர், தீயணைப்பு படையினர், வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த மீட்புப் பணியில் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திரிசூரை சேர்ந்த மற்றொரு தேசிய பேரிடர் குழு விரைவில் சம்பவ இடத்தை அடையும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதரிப்பூழா ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, தாழ்வான பகுதியான மூணாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இடுக்கியில் இரவு நேரப் பயணத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல், மழை காரணமாகப் பல சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்