'பாதுகாப்பு' காரணங்களால் 'பெண் கலெக்டர்' எடுத்த முடிவு! அடுத்த சில மணி நேரங்களில் வந்த முகநூல் பதிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. ஊரடங்கின் முதல்நாளிலேயே பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு அதிகாரிகளும் போலீசாரும் தடுப்பு பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த சவாலான பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை தினமும் கொரோனா பற்றிய அப்டேட்ஸ்களை தினமும் மக்களுக்கு வழங்கிய பீலா ரஜேஷ் ஐ.ஏ.எஸ், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோரின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.
ஊரடங்கில் நாடே வீட்டுக்குள் இருக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் தொடர்ந்து இயங்கி வரும் இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரியான ராணி நாகர் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ராணி தற்போது ஹரியானா மாநிலத்தில் காப்பகத் துறை இயக்குநராகவும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் கூடுதல் இயக்குநராகவும் உள்ள நிலையில் அவர் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை மாநில தலைமைச் செயலாளருக்கு அனுப்பியதோடு அதன் நகலை நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஹரியானா ஆளுநருக்கும் முதல்வருக்கும் இமெயில் மூலம் அனுப்பி வைத்தார்.
அந்த கடிதத்தில் அரசாங்க பணியில் தனிப்பட்ட பாதுகாப்பு காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ராஜினாமா செய்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் சண்டிகரில் இருந்து கார் மூலம் தனது சொந்த ஊரான காஸியாபாத் நகருக்கு தனது சகோதரியுடன் பயணம் செய்யத் தொடங்கினார். இது தொடர்பான தகவல்களை அவர் தனது முகநூலிலும் பதிவிட்டிருக்கிறார். மேலும் தான் முறையாக பாஸ் பெற்றிருப்பதாகவும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.