'மச்சி போர் அடிக்குதுன்னு, புலம்பும் டூட்ஸ்'... 'ஆனா கிராமத்தில் நடக்கும் அவலம்'... நெஞ்சை உலுக்கும் தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாநகரங்கள், நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருக்கும் சில பேர், ஊரடங்கு நேரத்தில் நேரமே போகவில்லை, சும்மா சாப்பிட்டுவிட்டு என்ன பண்றது என சலிப்பு தட்டுவதை நம்மில் பல பேர் பார்த்திருப்போம். நம்மில் பலருக்கு நேரம் போகவில்லை என்பது தான் பெரும் கவலையாக இருக்கும் நிலையில், ஊரடங்கு நேரத்தில் கிராமத்தில் மக்கள் படும் இன்னல்கள் குறித்து தற்போது ஆய்வு ஒன்று வந்துள்ளது.

'மச்சி போர் அடிக்குதுன்னு, புலம்பும் டூட்ஸ்'... 'ஆனா கிராமத்தில் நடக்கும் அவலம்'... நெஞ்சை உலுக்கும் தகவல்!

சமூக முன்னேற்றத்திற்கான நடவடிக்கை குழு, பர்தான் என்ற அமைப்பு மற்றும் இன்னும் சில அமைப்புகள் சேர்ந்து ஏப்ரல் 28 முதல் மே 2 வரை 12 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் 5162 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஸ்கார், மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், பீகார், அசாம் மற்றும் கர்நாடகாவில் உள்ள பல கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்று இந்த ஆய்வானது நடத்தப்பட்டது.

அதில் கிராமப்புறத்தில் உள்ள மக்களில் பாதிப் பேர் 50 சதவீதத்திற்கும் குறைவான உணவைச் சாப்பிடுவதாகவும், நெருக்கடியைச் சமாளிக்கக் குறைந்த உணவு மட்டுமே எடுத்துக் கொள்வதாகவும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 68 சதவீத  குடும்பங்கள் தங்கள் உணவில் உணவுப் பொருட்களைக் குறைத்துவிட்டதாகக் கூறி உள்ளனர். 50 சதவீத  குடும்பங்கள் ஒரு நாளில் சாப்பிடும் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டுள்ளார்கள்.

மேலும் 24 சதவீத  குடும்பங்கள் உணவு தானியங்களைக் கடன் வாங்கியுள்ளனர். 84 சதவீத குடும்பங்களுக்கு ரேஷன் கிடைத்ததாகக் கூறினாலும், ஆறில் ஒரு குடும்பம் இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஊரடங்கு காரணமாக அவர்களின் வருமானம் பாதிக்கும் கீழாகச் சென்று விட்ட நிலையில், 22 சதவீத குடும்பங்கள் தங்களது அன்றாட செலவைச் சமாளிக்கப் பணக்கார குடும்பங்களிடம் இருந்து கடன் வங்கியுள்ளார்கள்.

16 சதவீதம் பேர் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களிடம் இருந்து கடன் வங்கியுள்ளார்கள். 22 சதவீதம் கால்நடைகளை விற்பனை செய்து அதன் மூலம் பணத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளார்கள். அதேநேரத்தில் 14 சதவீதம் பேர் வீட்டுப் பொருட்களை அடைமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்கள். இந்த ஆய்வில் மேலும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்னவென்றால், எந்த செலவைச் சமரசம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்விக்கு, பலரும் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து நிறுத்த போவதாகக் கூறியுள்ளார்கள்.

இந்த நேரத்தில் பெண்கள் அதிக சிரமத்திற்கு ஆளாவதும் தெரியவந்துள்ளது. 62 சதவீத வீடுகளில் பெண் உறுப்பினர்கள் தண்ணீர் எடுக்க அதிக தூரம் நடப்பதும் தெரியவந்துள்ளது. 68 சதவீத வீடுகளில் பெண்கள்  விறகுகளைச் சேகரிப்பதில் அதிக நேரம் செலவழித்து வருவதாகவும் கூறியுள்ளார்கள்.

உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தும் இருந்தும் நேரம் போகவில்லை எனச் சலித்துக் கொண்டு பலரும் புலம்பி வரும் நிலையில், ஊரடங்கு நேரத்தில் இந்தியக் கிராமத்தில் உள்ள மக்கள் படும் துயரம் என்பது சொல்லில் அடங்காதது.  இந்த நேரத்தில் கண்ணதாசன் பாடல் வரிகளைத் தான், ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

''உனக்கும் கீழே உள்ளவர் கோடி.

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு''