'எப்ப வேணா இடிஞ்சு தலமேல விழலாங்க!'.. ஹெல்மெட் போட்டுக்கொண்டு வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப் பிரதேசத்தில் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு அலுவலகத்தில் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்தபடி வேலை செய்யும் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பி வருகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டத்தில் உள்ள மின்சாரத் துறை அலுவலகத்தின் மேற்கூரை கான்கிரீட்டால் போடப்பட்டுள்ளது. ஆனால் பல வருடங்களான இந்த கான்கிரீட் மேற்கூரை வலுவிழந்து வருவதால், பாழடைந்த அந்த கான்கிரீட் கூரை எப்போது வேண்டுனாலும் இடிந்து விழலாம் என்கிற நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த மேற்கூரை கான்கிரீட்டைத் தாங்குவதற்கான தூண்கள் அறைக்கு நடுவில் மட்டுமே உள்ளதாகவும், இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அசம்பாவிதமாக ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது என்கிற அச்சத்தில் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஹெல்மெட் அணிந்துகொண்டு பணிபுரிவதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுபற்றி மேலதிகாரிகளிடம் எத்தனையோ முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்றும், மழைக்காலத்தில் கட்டிடத்துக்குள் ஒழுகுவதால், முக்கிய ஆவணங்களை பாதுகாக்க அலமாரி கூட இல்லை என்றும் அவை அட்டைப் பெட்டியில்தான் வைக்கப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.