கூகுள் CEO சுந்தர் பிச்சை மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு.. பாலிவுட் இயக்குநர் கொடுத்த பரபரப்பு புகார்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகூகுள் CEO சுந்தர் பிச்சை மீது காப்புரிமை விதிகளை மீறியதாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாலிவுட் இயக்குநர் சுனில் தர்சன் என்பவர் ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வந்தது. இந்த சூழலில் இப்படத்தை மர்ம நபர்கள் சட்டவிரோதமாக யூடியூப்பில் பதிவேற்றம் செய்துவிட்டனர். ஆனால் இந்த படத்தின் காப்புரிமையை இயக்குநர் சுனில் தர்சன் யாருக்கும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சட்டவிரோதமாக தனது படம் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், காப்புரிமை சட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனத்தின் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மும்பை நீதிமன்றத்தில் சுனில் தர்சன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், காப்புரிமை சட்ட விதிகளை மீறியதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை மற்றும் அந்த நிறுவனத்தின் 5 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து, மும்பை அந்தேரி எம்ஐடிசி போலீசார் சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் நிறுவன அதிகாரிகள் 5 பேர் மீது காப்புரிமை சட்டவிதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்