"இனி பெண்களும் தைரியமா நைட்ல வெளில வருவாங்க".. கேரள MLA போட்ட ஒரு ஆர்டர்.. களைகட்டிய கடவுளின் தேசம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் பெண்கள் தைரியமாக இரவு நேரத்தில் வெளியே வருவதை உறுதி செய்யும் வகையில் இரவு திருவிழா நடத்தப்பட்டிருக்கிறது. இது அப்பகுதியை சேர்ந்த பெண்களை மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது.
கேரளாவின் மூவாற்றுப்புழா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மேத்யூ குழல்நாடன். இவர் கடந்த 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதிவரையில் இரவு விழாவை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 4 நாட்களும் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், பெண்கள் மற்றும் சிறுமியருக்கான தற்காப்பு பயிற்சி வகுப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு விழா தொடங்கி இரவு 11.30 மணி வரை நீடித்தது. இவ்விழாவில் பெண்கள், மாணவிகள் ஒன்றுகூடி ஆடல், பாடல் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
புது அனுபவம்
வழக்கமாக இப்பகுதியில் இரவு 8.30 மணி வரையில் மட்டுமே கடைகள் திறந்திருக்கும். ஆனால், இந்த விழாவை முன்னிட்டு இரவு 11.30 மணிவரையும் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதுபற்றி பேசிய இப்பகுதி மக்கள்,"இரவு நேரங்களில் பொதுவாக வெளியே செல்ல குடும்பத்தார் பெண்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால், இந்த நான்கு நாள் திருவிழாவில் ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இரவு நேரத்தில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் தற்காப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள பெண்கள் ஆர்வம் செலுத்தினர். இது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது" என்றனர்.
நம்பிக்கை
இந்நிலையில், இதுகுறித்து பேசிய மூவாற்றுப்புழா MLA மேத்யூ," பெண்களை வீட்டுக்குள் அடைத்துவைக்க கூடாது. அவர்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். பணி காரணமாக அவர்கள் வெளியே செல்லும்போது அவர்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். இரவு நேரத்தில் பெண்கள் வெளியே வர அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே இந்த விழாவை ஏற்பாடு செய்தோம். இதற்கான முதல் விதையை நான் விதைத்திருக்கிறேன். கேரளா முழுவதிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்" என்றார்.
இந்த விழாவில் MLA மேத்யூ கலந்துகொண்டு பெண்கள் மற்றும் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அவருடைய இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்