தாங்க முடியாத வறட்சி.. மழை வரணும்னு மக்கள் நடத்திய வினோத திருமணம்.. இது புதுசால்ல இருக்கு..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் மழை வேண்டி, தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர் உள்ளூர் மக்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தென்மேற்கு பருவமழை
ஜூன் முதல் செப்டம்பர் ஆகிய மாதங்களில் வட மற்றும் மத்திய இந்தியாவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இதனை ஈடுகட்ட இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து காற்றுவீசும். அப்போது, நீர்த்துளிகளை கொண்டுள்ள காற்று மலைகளின் மீது மோதி குளிர்வடைந்து மழையாகப் பெய்யும். கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகள், கொங்கன் கடற்கரை ஆகிய இடங்களில் இந்த பருவகாலத்தில் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அரபிக் கடலோர மாநிலங்கள், மத்திய மற்றும் வட கிழக்கு இந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும், உத்திர பிரதேசத்தில் வழக்கமாக பருவ மழை காலத்தின்போது பெய்யும் மழையை விட குறைவாகவே இந்த ஆண்டு மழையின் அளவு பதிவாகியிருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை 77.3 மிமீ அளவு மட்டுமே மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட குறைவாகும். இருப்பினும், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றுமுதல் உத்திர பிரதேசத்தில் கனமழை பெய்யலாம் என எச்சரித்திருக்கிறது.
சடங்கு
வழக்கத்தைவிட பருவமழை குறைந்ததால், உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த மக்கள் மழைவேண்டி வினோதமான திருமணம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை கோரக்பூரில் உள்ள காளிபாரி கோவிலில் நடைபெற்ற விழாவில், உள்ளூர் அமைப்பான இந்து மகாசங்கத்தால் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கே இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்யும் சடங்கு நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் உள்ளூர் மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இதுகுறித்து பேசிய இந்து மகாசங்கத்தைச் சேர்ந்த ராமகாந்த் வர்மா,"இப்பகுதி முழுவதும் வறட்சி போன்ற சூழ்நிலை நிலவுகிறது. பருவ மழை காலத்திலும் இங்கே மழையில்லை. கடந்த வாரம், நாங்கள் ஹவான் பூஜை செய்தோம். இப்போது நாங்கள் ஒரு ஜோடி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறோம். இந்த சடங்கு பலனளிக்கும் என்றும், இப்பகுதியில் மழை பெய்யும் என்றும் நம்புகிறோம்" என்றார்.
இந்த சடங்கில் கலந்துகொண்ட மக்கள், மழைவேண்டி கடவுளை பிரார்த்தனை செய்திருக்கின்றனர். உத்திர பிரதேசம் மட்டும் அல்லாது வட இந்திய மாநிலங்கள் பலவற்றில் இதுபோன்ற சடங்குகள் காலங்காலமாக செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்