'வாடகை வீட்டில்' இருப்பவர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'...டெல்லி அரசின் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாடகை வீட்டில் குடியிருப்போருக்கு டெல்லி அரசின் அறிவிப்பு, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 200 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என அறிவித்திருந்தார். இது டெல்லி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் 201 யூனிட் முதல் 400 யூனிட் வரையிலான மின்சாரத்தை பயன்படுத்தும் மக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆனால் வாடகை வீட்டில் இருப்போருக்கு இந்த சலுகை கிடைக்கப்பெறாமல் இருந்தது.
இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்போருக்கும் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வாடகை வீட்டில் இருப்போர் 200 யூனிட்டுக்கு மேல் வரும் மின்சாரத்திற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். இதற்காக ரூ3000 செலுத்தி பிரீபெய்ட் மீட்டர்களை பொருத்தி கொள்ள வேண்டும். இந்த பிரிபெய்டு மீட்டர் பொருத்த வாடகை ஒப்பந்தம் மற்றும் வாடகை ரசீது ஆகியவை தேவையில்லை.
இதனிடையே டெல்லியில் தொடர்ச்சியாக ஐந்தாம் ஆண்டாக மின்கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ1800 முதல் 2000 கோடிவரை கூடுதல் செலவீனம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.