'முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிகுண்டு'... 'மாசம் 100 கோடி மாமூல்'... 'எங்கே போனார் முன்னாள் மும்பை கமிஷனர்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள லுக்அவுட் நோட்டீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங் விவகாரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டுடன் கார் ஒன்று சிக்கிய விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மராட்டியத்தில் ஆட்சி செய்து வரும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது.
இந்த வழக்கை மும்பை காவல்துறை விசாரித்து வந்த நிலையில் வழக்கு விசாரணையைத் திசை திருப்பியதாக மும்பை காவல்துறை ஆணையர் பதவியிலிருந்த பரம்பீர் சிங் கடந்த மார்ச் மாதம் ஊர்காவல் படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
இதையடுத்து மாநில உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மும்பையில் ஓட்டல், மதுபார்களிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் பெற்றுத் தர போலீசாரை கட்டாயப்படுத்தியதாக அதிரடி புகாரைத் தெரிவித்து பெரும் புயலைக் கிளப்பினார்.
இந்த மாமூல் புகார் அனில் தேஷ்முக்கின் அமைச்சர் பதவிக்கே வேட்டு வைத்தது. இதையடுத்து மாமூல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்தவரான அனில் தேஷ்முக் மீது தற்போது சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
இந்த பிரச்சனைகள் ஒருபுறம் பற்றி எரிந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பரம்பீர் சிங் மீது அடுக்கடுக்காக பல்வேறு புகார்கள் வந்து குவிந்தது. பரம்பீர் சிங் பலரை மிரட்டி பணம் பறித்தார் என்றும் எஸ்.சி., எஸ்டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு அனில் தேஷ்முக் மீதான மாமூல் புகாரை விசாரித்து வரும் ஒருநபர் நீதி விசாரணை ஆணையம் பல தடவை சம்மன் அனுப்பியும் பரம்பீர் சிங் ஆஜராகவில்லை.
அனைத்து தரப்பிலிருந்தும் கடும் நெருக்கடி வந்த நிலையில், பரம்பீர் சிங் திடீரென தலைமறைவானார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய மராட்டிய உள்துறை மந்திரி திலீப் வல்சே, ''பரம்பீர் சிங் நாட்டை விட்டு வெளியேறியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதுகுறித்த உறுதியான தகவல் இன்னும் வரவில்லை. பரம்பீர் சிங் அரசாங்க அதிகாரி என்பதால், அவர் வெளிநாட்டிற்குச் செல்ல அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.
ஒரு வேளை அவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தால் அது அவருக்கு நல்லதல்ல. அதோடு வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க அவருக்கு எதிராக ஏற்கனவே லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது''. எனக் கூறியுள்ளார். வழக்கு நெருக்கடி காரணமாக முன்னாள் மும்பை ஆணையர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்