ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சலுகைகள்... 'சிறு குறு தொழில்களுக்கு பிணையின்றி கடனுதவி!'.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சிறு மற்றும் குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சலுகைகள்... 'சிறு குறு தொழில்களுக்கு பிணையின்றி கடனுதவி!'.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

அப்போது சிறு மற்றும் குறு தொழில்கள் குறித்து அவர் பேசுகையில்:-

சிறு மற்றும் குறு தொழில்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) ரூ.3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.

இந்த கடனுதவி பிணையின்றி வழங்கப்படும்.

இந்த கடனுதவி மூலம் நாடு முழுவதும் 45 லட்சம் நிறுவனங்கள் பயன் அடையும்.

இந்த கடனுதவி பெற அக்டோபர் 31 வரை கால அவகாசம் வழங்கப்படுள்ளது.

மேலும், சிறு, தொழில்களுக்கு முதலீட்டு வரம்பு ரூ. 5 கோடியிலிருந்த ரூ. 10 கோடியாக அதிகரிப்பு.

* குறுந்தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு 25 லட்ச ரூபாயில் இருந்து ரூ. 1 கோடியாக உயர்வு.

* கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம். முதல் ஓராண்டுக்கு கடன் தவணை வசூலிக்கப்படாது.

* வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய கடன்  கிடைக்க அரசே உத்தரவாதம் தரும்.

* ரூ. 100 கோடி வியாபரம் உள்ள சிறு தொழில்களுக்கு ரூ. 25 கோடி கடன் இருந்தால் கூடுதல் கடன் தரப்படும்.

* ரூ. 200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது.

* முதலீடு ரூ. 1 கோடியாக இருந்தாலும் சேவை அளிக்கும் நிறுவனம் சிறு, குறு, நடுத்தர நிறுவனமாக கருதப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, நலிவடைந்த நிலையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் விதமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியாக வழங்க வசதி செய்து கொடுக்கப்படும்.

இந்த கடனுதவி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டு வர பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.