ஒரே ஒரு ‘பவர் நேப்’ .. அப்றம் பாருங்க ‘குழந்தைங்க’ எப்படி ‘பவரா’ இருக்காங்கனு! ஃபிட் இந்தியாவின் ‘தரமான’ முன்னெடுப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉடல் நலம் சார்ந்த அக்கறையை மக்கள் மத்தியில் அதிகப்படுத்துவதற்காக மத்திய அரசின் சார்பில் ஃபிட் இந்தியா என்கிற இயக்கம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் சார்பாக மார்ச் மாதம் முழுக்க மன நல ஆரோக்கியத்துக்கான மாதமாக அனுசரிக்கப்பட உள்ளது. இதேபோல் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட ஆரோக்கியமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்த இயக்கம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் கல்வித் துறை சார்பில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சில வேண்டுகோள்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி அடுத்த மாதம் முழுக்க பள்ளி வேலை நாட்களில் ஏதேனும் 5 நிமிடங்களுக்கு மாணவர்கள் வகுப்பறையில் தூங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு குட்டித் தூக்கம் போட்டால் அடுத்த பல மணி நேரங்களுக்கு புத்துணர்வோடு மாணவர்களால் செயல்பட முடியும் என்கிற அடிப்படையில் இந்த கருத்து வேண்டுகோளாக வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மூளையை உற்சாகப்படுத்தும் விதத்திலான குறுக்கெழுத்து, வார்த்தை விளையாட்டுகள் உள்ளிட்டவற்றுக்கும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிப்ரவரி மாதம் முழுக்க திங்கள்கிழமை யாவும் மேஜிக்கல் மண்டே என்கிற அடைமொழியுடன் அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படியே பள்ளிகளிலும் இந்த யோசனை முன்னெடுக்கப்பட்டது.
தவிர ஏப்ரல் மாதம் முழுக்க தினமும் ஏதேனும் 10 நிமிடங்களுக்கு பள்ளியில் அனைத்து மாணவர்களும் பங்கு பெறும் உடற்பயிற்சி நிகழ்த்தப்பட அறிவுறுத்தப்பட்ட வேண்டும் என்றும் ஜூன் மாதம் இலக்கியம் சார்ந்த விஷயங்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஃபிட் இந்தியா இயக்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.