வன்முறை.. தாக்குதல்.. உயிர் பலி.. துப்பாக்கிச் சூடு.. பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூரு!..144 தடை உத்தரவு! நடந்தது என்ன? பரபரப்பு வீடியோக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவின் காரணமாக எம்.எல்.ஏ வீடு சூறையாடப்பட்டதை அடுத்து, காவல்நிலையங்கள் மீது தாக்குதல், துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவற்றால் பெங்களூரு மிகுந்த பதற்றத்திற்கு ஆளாகியுள்ளதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வன்முறை.. தாக்குதல்.. உயிர் பலி.. துப்பாக்கிச் சூடு.. பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூரு!..144 தடை உத்தரவு! நடந்தது என்ன? பரபரப்பு வீடியோக்கள்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புலிகேசி நகரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி காவல்பைரசந்திரா என்ற பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது உறவினர் நவீன் என்பவர் தனது பேஸ்புக்கில் இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை பதிவினை பதிவிட்டதாகவும், இந்தப் பதிவு வைரலாகி சர்ச்சைக்குள்ளானதும், அடுத்த சில மணி நேரத்திலேயே அப்பதிவு நீக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

ஆனால் இதுபற்றி பேசிய நவீன் தனது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக விளக்கமளித்துள்ள நிலையில், இதனிடையே இந்தப் பதிவால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ வீட்டின் முன்பு திரண்டு, வீட்டு முன்பிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த இரண்டு கார்களுக்கு தீவைத்தனர்.

உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விரைந்தனர். ஆயினும் தீயணைப்பு வாகனங்களை கலவரக்காரர்கள் தடுத்து நிறுத்தி சேதப்படுத்தி, வாகனத்தை  திரும்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர் டிஜே ஹள்ளி காவல்நிலையங்களுக்குச் சென்ற அவர்கள், பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தை கலைத்தனர். காவல் துறையினர் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும்,  காவல் பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும், வேறு வழியில்லாத காரணத்தால் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியதாக இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் காவல்துறையினர், கலவரக்காரர்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் பெங்களூரு கேஜி ஹள்ளி, டிஜே ஹள்ளி, பாரதிநகர், புலிகேசிநகர், பனஸ்வாடி காவல்நிலையங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவிட்ட நவீனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்