"எங்க இலைக்கு ஏன் பன்னீர் வைக்கல".. தகராறில் இறங்கிய மாப்பிள்ளை வீட்டினர்..? கல்யாண வீட்டில் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் தங்களுக்கு பன்னீர் பரிமாறப்படவில்லை எனக்கூறி மாப்பிள்ளை வீட்டார் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதன்பின்னர் இந்த விவகாரத்தில் போலீசார் ஈடுபட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
பொதுவாக திருமணங்களில் பரிமாறப்படும் உணவுகள் குறித்த பேச்சு பல மாதங்களுக்கு முன்பே துவங்கிவிடும். என்னென்ன பதார்த்தங்கள் வைக்கப்பட வேண்டும் என்பது பற்றி பலகட்ட விவாதங்கள் நடக்கும். இருப்பினும் வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் திருமண விழாக்களில் பன்னீர் பரிமாறப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் இதுவே ஒரு கல்யாணத்தில் தகராறு ஏற்பட காரணமாகவும் அமைந்திருக்கிறது.
உத்திர பிரதேசத்தின் பாக்பாத் அருகே உள்ளது குரானா எனும் கிராமம். இங்கே கடந்த புதன்கிழமை திருமணம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. அப்போது விருந்தினர்களுக்கு பன்னீர் பரிமாறப்பட்டிருக்கிறது. ஆனால், மாப்பிள்ளை வீட்டினர் சாப்பிடும்போது பன்னீர் காலியானதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து மாப்பிள்ளையின் உறவினர்கள் சாப்பாடு பரிமாறுபவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதனை தொடர்ந்து மணப்பெண் வீட்டினர் சமாதானப்படுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து இசைக் கச்சேரியில் இசைக்கப்பட்ட பாடல்கள் பிடிக்கவில்லை எனவும் ஒரு வாக்குவாதம் வந்திருக்கிறது. இது தொடர்பாக இருவீட்டினர் இடையே வாக்குவாதம் எழ, இது பின்னர் கைலப்பாக மாறியிருக்கிறது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கின்றனர்.
தகராறில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் 4 பேரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரும் காவல்நிலையத்திற்கு சென்று உள்ளனர். அப்போது போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர். இதுபற்றி பேசிய காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் குமார் "திருமண நிகழ்ச்சியில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இந்த தாக்குதலினால் பாதிப்படைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமண விருந்தில் பன்னீர் பரிமாறுவதில் வந்த சிக்கல் காவல்நிலையம் வரை சென்றது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்