‘நாங்க விவசாயிகளின் பிள்ளைங்க’!.. ‘இதுக்குமேல அத வச்சி என்ன பண்ண போறோம்’.. முன்னாள் விளையாட்டு வீரர்கள் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக முன்னாள் விளையாட்டு வீரர்கள் தங்களது விருதுகளை திருப்பிக் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் கர்தார் சிங், அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஜ்ஜன் சிங் சீமா, ஹாக்கி வீரர் ராஜ்பீர் கவுர் உள்ளிட்ட பல வீரர்கள் வரும் 5ம் தேதி டெல்லிக்கு சென்று தங்களது விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் டெல்லிக்கு செல்வதை தடுக்க போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் போலீசார் தடுத்தனர். அற வழியில் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்காக மத்திய அரசுக்கும், ஹரியானா அரசுக்கும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த கூடைப்பந்து வீரர் சஜ்ஜன் சிங் சீமா, ‘நாங்கள் விவசாயிகளின் பிள்ளைகள். அவர்கள் கடந்த பல மாதங்களாக அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு வன்முறை சம்பவம் கூட நிகழவில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் டெல்லிக்கு செல்லும்போது அவர்களின் மீது நீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எங்கள் பெரியவர்கள், சகோதரர்களின் தலைப்பாகைகள் தூக்கி எறியப்பட்டபோது, நாங்கள் விருதுகளையும், கவுரவத்தையும் வைத்து என்ன செய்யப்போகிறோம். நாங்கள் எங்களது விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதனால்தான் விருதுகளை திருப்பிக் கொடுக்க உள்ளோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் டெல்லி எல்லையில் வரும் டிசம்பர் 5ம் தேதி விவசாயிகளின் போராட்டத்தில் பல முன்னாள் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாக சஜ்ஜன் சிங் சீமா தெரித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் பல்வேறு பகுதிகளை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்