சரிந்துபோன பூண்டு விலை.. விரக்தியில் மூட்டை மூட்டையாக ஆற்றில் வீசும் விவசாயிகள்.. நாட்டையே அதிர வைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் பூண்டின் விலை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக விரக்தியடைந்த விவசாயிகள் மூட்டை மூட்டையாக பூண்டை ஆற்றில் வீசும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விலை வீழ்ச்சி
மத்திய பிரதேசத்தில் பூண்டின் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், அரசு உடனடியாக தலையிட்டு ஏற்றுமதிக்கு உத்தரவிடவேண்டும் எனவும் விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும், ஆதங்கத்தை பதிவு செய்யும் விதமாக தாங்கள் விளைவித்த பூண்டுகளை மூட்டை மூட்டையாக ஆற்றில் வீசிவருகின்றனர் விவசாயிகள். இது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் செஹோர் மற்றும் ராஜ்கர் மாவட்டங்களை பிரிக்கும் பாலத்தில் இருந்து பார்வதி ஆற்றில் விவசாயிகள் பூண்டு மூட்டைகளை வீசியுள்ளனர். இந்த வீடியோவை கிசான் ஸ்வராஜ் சங்கதன் (KSS) என்ற அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த அமைப்பின் செயல்பாட்டாளர் ஒருவர் இதுபற்றி குறிப்பிடுகையில்,"இந்த வீடியோ கிளிப் செஹோர் மாவட்டத்தில் உள்ள அஷ்டா நகரத்திலிருந்து வந்தது. அங்குள்ள அதன் பணியாளர் ஒருவர் இதனை அனுப்பினார்" என்றார்.
நஷ்டம்
இதுபற்றி பேசிய புல்மோக்ரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜம்ஷெட் கான்," ஒரு கிலோ பூண்டை ரூ.1 முதல் 4 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், ஒரு கிலோவுக்கான உற்பத்திச் செலவு ரூ.30-40 ஆக இருந்தது. நாங்கள் பெரும் இழப்பை எதிர்கொள்கிறோம், அதனால் விளைபொருட்களை ஆற்றில் கொட்டுகிறோம்" என்றார். மேலும், ஒரு குவிண்டால் (100 கிலோ) பூண்டுக்கான உற்பத்திச் செலவு ரூ.2,500-3,000 ஆக இருப்பதாகவும், ஆனால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.600 வரை மட்டுமே கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விலை வீழ்ச்சியை கண்டித்து, சூர்யபால் சிங் தாக்கூர் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி ஜாவர் தாசில்தாரிடம் மனு ஒன்றினை அளித்திருக்கின்றனர். விவசாயிகளின் நலன் கருதி வெங்காயம் மற்றும் பூண்டை உடனடியாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு இந்த மனு அனுப்பப்பட்டிருக்கிறது.
मध्यप्रदेश मैं किसान लहसुन के कट्टे पार्वती नदी में फेंक रहा है क्योंकि लहसुन का भाव मिल नहीं रहा है। pic.twitter.com/PVu5In9Bgx
— Kisan Swaraj Sangathan (@KisanSwaraj_) August 17, 2022
மற்ற செய்திகள்