அது எங்கள ஒன்னும் செய்யாது.. வீட்டுக்குள்ள பாம்புக்கு கோவில்.. மிரள வைக்கும் குடும்பம்.. ரொம்ப வருஷமாவே இப்படித்தானாம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசா மாநிலத்தில் பல ஆண்டுகளாக குடும்பம் ஒன்று தங்களது வீட்டில் நாகப்பாம்புகளை வீட்டில் வளர்த்து வருகின்றனர். அவற்றை வழிபட்டுவரும் இந்த குடும்பத்தினர், அது தங்களை ஒன்றும் செய்யாது எனவும் கூறுகின்றனர்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று பழமொழி உண்டு. அந்த வகையில் பாம்பை கண்டு அச்சம் கொள்ளாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பொதுவாக ஒருவரது வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டால் உடனடியாக அக்கம் பக்கத்தில் ஆட்கள் திரண்டு பெரிய களேபரமே நடந்துவிடும். எதிர்பாராத வேளையில் பாம்பை பார்க்க நேரிட்டால் அது ஏற்படுத்தும் அதிர்ச்சி நம்மை விட்டு அகலவே சில மணி நேரங்கள் தேவைப்படும். ஆனால், இந்தியாவில் பரவலாக பாம்புகளை வழிபடும் வழக்கமும் இருந்து வருகிறது. பாம்புகளுக்கென தனி கோவில்களை அமைத்து மக்கள் வழிபடுவதை பார்த்திருப்போம். ஆனால், ஒடிசாவில் ஒரு குடும்பத்தினர் தங்களது வீடுகளில் நாகப் பாம்புகளை வளர்த்தும் அவற்றை வழிபட்டும் வருகின்றனர்.
பாம்புகள்
ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்திற்கு உட்பட்ட நீலிமாரி கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்ட பூமியா. இவரது வீட்டில் மூன்று அறைகள் இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது வீட்டில் கரையான் புற்று வளர்வதை பார்த்திருக்கிறார் இவர். அதை அப்படியே விட அதற்குள் இரண்டு நாகங்கள் புகுந்திருக்கின்றன. ஆனால், பூமியா அவற்றை வெளியேற்றவில்லை. மாறாக, அவற்றுக்கு பால் வைத்து வழிபட செய்திருக்கின்றனர் இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள். தற்போது இவரது வீட்டில் உள்ள மூன்று அறைகளில் இரண்டில் பாம்பு புற்று இருக்கிறது.
இந்த பாம்புகளுக்கு வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் பால் வைத்து வழிபாடு நடத்திவருகின்றனர் பூமியாவின் குடும்பத்தினர். இதுகுறித்து பேசிய நீலகண்ட பூமியாவின் மகள் லக்ஷ்மி கபாசி,“நான் அந்த பாம்புகளை முதலில் கவனித்து பால் ஊட்டினேன். ஆனால் என் திருமணத்திற்குப் பிறகு, எனது குடும்பத்தினர் அவர்களுக்கு உணவளித்து, அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அவர்களால் நாங்கள் எந்தப் பிரச்சனையையும் எதிர்கொண்டதில்லை" என்கிறார்.
பிரச்சனை இல்லை
மேலும், அவரது தாய் இதுபற்றி பேசுகையில்,"அறையில் இரண்டு பெரிய பாம்புகள் உள்ளன. இருப்பினும், அவர்களால் நாங்கள் எந்த பிரச்சனையையும் சந்தித்ததில்லை. என் மகள் அவர்களை நன்றாக கவனித்துக் கொள்வாள். இப்போது வயதாகிவிட்டதால், பாம்பை உணவுக்காக வெளியில் செல்ல விடுகிறோம். அவை வயிறு நிரம்பியதும் திரும்பி வந்துவிடும்" என்றார். இது உள்ளூர் மக்களை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
மற்ற செய்திகள்