'எங்க புள்ளைய கடைசியா ஒரு தடவ'... கேரளாவில் நடந்த மகனின் இறுதிச்சடங்கு... ஃபேஸ்புக்கில் பார்த்து கதறித்துடித்த பெற்றோர்!.. மனதை நொறுக்கிய துயரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கேரளாவில் நடந்த மகனின் இறுதிச்சடங்கை, துபாயில் இருக்கும் பெற்றோர் முகநூல் வழியாக பார்த்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

'எங்க புள்ளைய கடைசியா ஒரு தடவ'... கேரளாவில் நடந்த மகனின் இறுதிச்சடங்கு... ஃபேஸ்புக்கில் பார்த்து கதறித்துடித்த பெற்றோர்!.. மனதை நொறுக்கிய துயரம்!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா, மலசேரி, சம்மக்காவிளையல் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் துபாயில் வசித்து வருகின்றனர். இந்த இந்தியத் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் ஜோயல் ஜி ஜோமே (வயது 16). இவர் ஷார்ஜாவில் உள்ள ஜெம்ஸ் மில்லினியம் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஜோயல் ஜோமேவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2 வாரங்களுக்கு முன் உடல்நிலை மோசமாகவே துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது ஈஸ்டர் பண்டிகையன்று ஜோயல் உயிரிழந்தார். இதில் உருக்கமான விஷயம் என்னவென்றால், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி புனித வெள்ளியன்று ஜோயல் பிறந்து, 2020-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று உயிரிழந்தார்

தனது மகனை கேரளாவில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஜோயல் பெற்றோர் விரும்பினர். இதற்காக, தனது மகனின் உடலை கேரளாவுக்குக் கொண்டு செல்ல ஐக்கிய அரபு அமீரக அரசிடம் அனுமதி கோரினர்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவுக்கு எந்தப் பயணிகள் விமானமும் இயக்கப்படவில்லை என்று கூறி ஜோயல் உடலை அனுப்ப அமீரக அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட வாதம், கெஞ்சல், அழுகை ஆகியவற்றுக்குப் பின் சரக்கு விமானத்தில் அனுப்ப அதிகாரிகள் அனுமதித்தனர். ஆனால் உடன் யாரும் செல்ல அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.

ஜோயலின் தந்தை அதிகாரிகளிடம் போராடியும் அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம் எமிரேட்ஸ் சரக்கு விமானத்தில் ஜோயல் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி கேரளாவுக்கு அனுப்பப்பட்டது.

பெட்டியை விமானத்தில் ஏற்றும் முன் ஷார்ஜாவில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சிறுவன் ஜோயல் உடலுக்குப் பிரார்த்தனை நடந்தது. இந்தப் பிரார்த்தனைகளை கேரளாவில் உள்ள அவர்களின் உறவினர்கள் அனைவரும் ஃபேஸ்புக் மூலம் பார்த்து கண்ணீர் விட்டனர். தனது மகனின் உடலை சரக்கு விமானத்தில் ஏற்றும் முன் அவரின் பெற்றோர் கண்ணீர் விட்டு, முத்தமிட்டு அனுப்பினர்.

அதன்பின் கொச்சி விமான நிலையத்துக்கு எமிரேட்ஸ் சரக்கு விமானத்தில் வந்த சிறுவன் ஜோயல் உடலை பத்தினம்திட்டாவில் இருக்கும் உறவினர்கள், அதிகாரிகள் உதவியுடன் பெற்று சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர்.

பத்தினம்திட்டா மாவட்டம் மலசேரி, சம்மக்காவிளையல் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இறுதிச்சடங்கு நடந்தது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஃபேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இந்தக் காட்சிகள் அனைத்தையும் துபாயில் உள்ள ஜோயலின் தாயும், தந்தையும், சகோதரர்களும் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினர்.

பத்தினம்திட்டாவைச் சேர்ந்த ஜோயலின் உறவினர் ஒருவர் கூறுகையில், "தனது மகனின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்கமுடியாத கொடுமையான சூழல் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது. அந்தச் சிறுவன் இழப்பிலிருந்து அந்தக் குடும்பத்தார் மீண்டு வர இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும்" எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.