‘18 வருசம் எப்படிங்க அலட்சியமா விட்டீங்க’.. விசிலால் ஏற்பட்ட விபரீதம்.. இளைஞரின் ‘ஸ்கேன்’ ரிப்போர்ட்டை பார்த்து மிரண்ட டாக்டர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட இளைஞரின் நுரையீரல் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவா பகுதியை சேர்ந்தவர் சூரஜ் (வயது 32). இவர் பல ஆண்டுகளாக மூச்சு திணறலால் சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் தொடர் இருமலாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும், முழுமையாக குணமடையாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது சூரஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். இதில் சூரஜின் நுரையீரல் பகுதியில் ஒரு சிறிய பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை செய்து அந்த பொருளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நுரையீரல் சிறப்பு பிரிவு மருத்துவர்கள் சூரஜ்-க்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது அவரது நுரையீரலில் ஒரு பேனா மூடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து அந்த பேனா மூடியை அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்துள்ளனர். தற்போது அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக கூறிய மருத்துவர்கள், ‘சூரஜ் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது அடிக்கடி பேனா மூடியை வைத்து விசில் அடித்துள்ளார். ஒருமுறை இதுபோல் விசில் அடித்த போது பேனா மூடியை அவர் விழுங்கி விட்டார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்தபோது எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளனர்.
ஆனால் அதன்பின்பு சூரஜ் அடிக்கடி சுவாச பிரச்சனை மற்றும் இருமலால் அவதிப்பட்டார். அதற்கு மட்டும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இப்போதுதான் அவரது நுரையீரலில் பேனா மூடி சிக்கி இருந்தது தெரியவந்தது’ என தெரிவித்துள்ளனர். சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்