'தம்பி, தாய் பாசத்துல எல்லாரையும் மிஞ்சிட்ட டா'... 'உசுரா நினைத்த அம்மாவின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை'... இதயங்களை நெகிழ வைத்த இளம் மருத்துவர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகன் தனது தாய் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு இதற்கு மேல் என்ன உதாரணம் வேண்டும் என நிரூபித்துள்ளார் இளம் மருத்துவர் ஒருவர்.
கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகே உள்ள மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷா. இவரது குடும்பம் பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் நிலையில், மருத்துவம் மீது இருந்த ஆர்வம் காரணமாக, சண்டிகரில் உள்ள புகழ்பெற்ற பிஜிஐஎம்ஆரில் கதிரியக்க நோயறிதல் படிப்பில் முதுகலைப் படிப்பை முடித்து சத்தீஸ்கர் மருத்துவமனையில் கைநிறைய சம்பளத்துடன் வேலைக்குச் சேர்ந்துள்ளார் ஹர்ஷா.
இதற்கிடையே, 15 நாட்களுக்கு முன்பு ஹர்ஷாவிற்கு இடியாய் ஒரு செய்தி வந்தது. அதில் ஹர்ஷாவின் தாய் ராஜலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ராஜலட்சுமி மாண்டியாவில் இருப்பதால் மருத்துவமனையில் 10 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு மாண்டியா விரைந்தார் ஹர்ஷா.
அப்போது கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட அவரின் தாய் ராஜலட்சுமிக்கு ஐசியூ வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனக்கு இருந்த தொடர்புகள் மூலம் பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதி பெற முயன்றுள்ளார் ஹர்ஷா. ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.
தாய் ராஜலட்சுமியின் நிலையைச் சோதித்துப் பார்த்தவர்கள், அவருக்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளார் என்று கூறி கைவிரித்துள்ளனர். ஒரு மருத்துவராக இருந்துகொண்டு தனது தாய்க்கே சிகிச்சை அளிக்க முடியாத விரக்தியின் உச்சிக்கே போனார் மருத்துவர் ஹர்ஷா.
இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என, மாவட்ட அரசு மருத்துவமனை மூத்த மருத்துவர் ராஜேஸ்வரியைத் தொடர்புகொண்டு விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள, இறுதியில் அரசு மருத்துவமனையில் தாய் ராஜலட்சுமியை சேர்த்துள்ளார். அங்கு ராஜேஸ்வரி 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒவ்வொரு நாளும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருந்துள்ளது.
குறிப்பாக ஆக்சிஜன் அளவு மேம்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த ராஜலட்சுமியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தனது தாயின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவமனைக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த 10 நாட்களும் மருத்துவர்களுடன் இணைந்து மருத்துவ பணியை இலவசமாகப் பார்த்து வருகிறார் மருத்துவர் ஹர்ஷா.
மேலும் அந்த மருத்துவமனையில் சில நாட்களாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. ஆனால் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. மேலும் ஊழியர்களை வேலைக்கு எடுக்க நேர்காணலுக்கு அழைப்பு விடுத்தும் கொரோனா மருத்துவமனையில் பணிபுரிய யாரும் முன்வரவில்லை.
இதனால் அங்கிருக்கும் மருத்துவர்கள் கூடுதல் நேரம் பணியாற்றும் நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த தகவலைக் கேள்விப்பட்ட மருத்துவர் ஹர்ஷா, தன் தாயைக் காப்பாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் தான் வேலை பார்க்கும் சத்தீஸ்கர் மருத்துவமனையில் கூடுதலாக விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கு பணியாற்றி வருகிறார்.
தனது தாயைக் காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக இளம் மருத்துவர் அரசு மருத்துவமனையில் தன்னார்வலராகப் பணி செய்து வருவது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா என்ற அரக்கன் நம்மைச் சூழ்ந்த நிலையிலும், மனிதம் இன்னும் இருக்கிறது, மனிதர்கள் அற்புதமானவர்கள் எனப் பலரும் நிரூபித்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்