"ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்".. இ ரிக்ஷா ஓட்டும் மாற்றுத்திறனாளி.. பின்னணி கேட்டு மனம் உடையும் நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நபரின் வாழ்க்கை, திடீரென எதிர்பாராத நேரத்தில் அப்படியே தலைகீழாக மாறும் செய்தியை நாம் நிறைய விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம்.
அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர், தற்போது இ - ரிக்ஷா ஓட்டி வரும் நிலையில், அவர் இதற்கு முன்பு எப்படி இருந்தார் என்பது குறித்து தகவல் பலரையும் உருக வைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், Jalaun என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா பாபு. கடந்த 1997 ஆம் ஆண்டு, தன்னுடைய 7 வயதில் நிகழ்ந்த ரெயில் விபத்து ஒன்றில், தனது இடது காலை இழந்துள்ளார் ராஜா.
தொடர்ந்து, நிதி என்ற பெண்ணை திருமணம் செய்த ராஜா பாபுவுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், மாற்றுத்திறனாளி ராஜாவுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதன் காரணமாக, மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டில் கிளப்புகளுக்காக விளையாட ஆரம்பித்தவர், தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திவ்யாங் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக அவருக்கு கிரிக்கெட் வாய்ப்பு கிடைத்த நிலையில், 2015 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் சிறந்த வீரர் விருதையும் ராஜா பாபு பெற்றிருந்தார்.
முன்னதாக, கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த சமயத்திலே இவர் ரிக்ஷா ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. ராஜாவின் கிரிக்கெட் பயணத்தில், 2017 ஆம் ஆண்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், 20 பந்துகளுக்கு 67 ரன்கள் அடித்திருந்தது, பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில் எதிர்பாராத சம்பவம் அரங்கேறி இருந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வந்த திவ்யாங் கிரிக்கெட் அசோசியேஷன், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பேரிடர் காரணமாக நிதி நெருக்கடியால் தவித்தது. இதனால், ராஜா உள்ளிட்ட பல மாற்றுத்திறனாளி வீரர்கள், கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் வருமானத்திற்கு கடும் அவதிப்பட்டனர்.
தனது குடும்ப சூழ்நிலைக்காக பால் பாக்கெட் போட்டு வந்த ராஜாவுக்கு, அப்பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர், இ ரிக்ஷா ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். இதனை வைத்துக் கொண்டு, தினமும் சுமார் 10 மணி நேரம் வரை வண்டி ஓட்டி வரும் ராஜா பாபு, ஒரு நாளைக்கு 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இப்படி ஒரு குறைந்த வருமானம் காரணமாக, தனது வீட்டுச் செலவு மற்றும் குழந்தைகள் படிப்பிற்கான செலவைக் கூட தன்னால் பார்த்துக் கொள்ள முடியவில்லை என உருக்கமாகவும் ராஜா பாபு கூறியுள்ளார்.
அதிரடி பேட்டிங் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் பலரது கவனத்தையும் பெற்றிருந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரருக்கு தற்போது நேர்ந்த நிலை, கேள்விப்படும் பலரையும் கடுமையாக மனமுடைய வைத்துள்ளது.
மற்ற செய்திகள்