'மட்டன் சூப்பில் சயனைடு'...'நாய்க்கு கொடுத்து சோதனை செய்தாரா ஜூலி?'...நடுங்க வைக்கும் தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில மாதங்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கிய பெயர் ஜூலி. அவ்வளவு எளிதில் இந்த பெயரை யாரும் மறந்திருக்க முடியாது. ஒட்டுமொத்த குடும்பத்தையே மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து கொலை ஜூலியை கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். இவர் தனது திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த குடும்பத்தினரை கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொருவராக மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். கேரளாவை உலுக்கிய இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜூலி தாமஸ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த இருவரையும் கடந்த அக்டோபர் மாதம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே தற்போது விசாரணையில் வெளிவந்திருக்கும் தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஜூலி தனது வீட்டில் ஆசையாக வளர்த்து வந்த நாயை கொலை செய்ததாக காவல்துறையினருக்கு தற்போது தகவல் கிடைத்துள்ளது. இதனை விசாரணையின் போது ஒப்புக்கொண்ட அவர், நாய்க்கு வெறி பிடித்ததால் அதனை விஷம் கொடுத்து கொன்றதாக கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் அதனை ஏற்க மறுத்துள்ளார்கள்.
அதற்கு காவல்துறையினர் சந்தேகிக்கும் காரணம் தான், வழக்கு விசாரணையில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. ''தொடர் கொலைகளை செய்வதற்கு முன்பாக சயனைடை நாய்க்கு கொடுத்து ஜூலி பரிசோதனை செய்திருக்கலாம் என காவல்துறையினர் அழுத்தமாக நம்புகிறார்கள். இதற்காக சிறப்பு புலனாய்வு காவல்துறையினர், ஜூலியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று நாய் இறந்தது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஜூலியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாய் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி, நாயின் உடலை பிரேத பரிசோதனை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளார்கள். சயனைடால் தான் நாய் இறந்தது என்று நிரூபணமானால் இந்த வழக்கில் அது முக்கிய திருப்பமாக கருதப்படும். மீண்டும் ஜூலி வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் கேரளாவில் பரபரப்பு நிலவுகிறது.