‘மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது’!.. மறுபடியும் ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனைவியிடம் வரதட்சிணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என மும்பை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாந்த் ஜாரே என்பவரை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தனது கணவரும், மாமியாரும் தன்னை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கடந்த 2004ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் கணவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேதிவாலா, ஐபிசி பிரிவு 498A-ன் படி மனைவியிடம் பணம் கேட்பது, வரதட்சணை துன்புறுத்தல் ஆகாது என பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேதிவாலா, உடலுறவு கொள்வதைத் தவிர தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே பாலியல் அத்துமீறல் என்றும், ஆடையின் மேல் தொட்டால் பாலியல் அத்துமீறல் இல்லை என்றும் அண்மையில் பரபரப்பு தீர்ப்பளித்தார்.
இதேபோல் மற்றொரு வழக்கில் சிறுமியின் கையை பிடித்திருப்பது பேன்ட் ஜிப் திறந்திருப்பது ஆகியவை பாலியல் அத்துமீறலாகாது என சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கினார். மற்றொரு வழக்கு ஒன்றில், பலாத்காரம் செய்திருந்தால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும். ஆனால் பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இல்லை. மருத்துவ அறிக்கையும் காயங்கள் இல்லை என கூறிவிட்டதால் இந்த சம்பவம் இருவரது விருப்பத்தின் பேரிலேயே நடந்திருக்கும் எனக் கூறி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில் மனைவியிடம் கணவர் வரதட்சிணை கேட்பது துன்புறுத்தலாகாது என தற்போது தீர்ப்பு வழங்கியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இவரது தீர்ப்புகளுக்கு கண்டனங்கள் எழுந்து வருவதால், மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த பரிந்துரையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு சமீபத்தில் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்