நீங்க எப்படி என்ன 'அந்த மாதிரி' சொல்லலாம்...? '12 ஏக்கர் நெலம் வச்சிருக்கேன்...' '500 ரூபாய் சம்பளம் வேற கொடுக்குறேன்...' - கங்கானாவிற்கு பதிலடி கொடுத்த பாட்டி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைகளுக்கு பெயர்போனவராக திகழ்ந்துவருகிறார். இந்நிலையில் தற்போது வேளாண்சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் பங்குபெற்ற பாட்டியை குறித்து தவறான தகவலை பதிவிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாலிவுட் நடிகையான கங்கனா, இந்தியாவில் நிகழும் சில சம்பவங்களை குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் தற்போது இந்திய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் குறித்தும், அதில் பங்குகொண்ட ஒரு பாட்டியினை குறித்தும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், 'ஷாஹீன் பாக் போராட்டத்தில் பங்கேற்ற மூதாட்டிதான் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர். இவரை 'டைம்' இதழ் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண்மணி எனக் குறிப்பிட்டு இருக்கிறது. இப்போது, இவர் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இருக்கிறார். இந்த மூதாட்டி போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள 100 ரூபாய் கொடுங்கள் போதும்' என பாட்டியினை குறித்து பதிவிட்டுருந்தார்.
ஆனால் உண்மையென்னவென்றால், 'டைம்' பத்திரிகை பாராட்டிய மூதாட்டியின் பெயர் பில்கிஸ் பானோ. ஆனால், பில்கிஸ் மூதாட்டிக்குப் பதிலாக மொஹிந்தர் கவுர் என்ற மூதாட்டியின் புகைப்படத்தை பகிர்ந்து கருத்து பதிவிட்டார் கங்கனா.
கங்கனாவின் இந்த ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் மட்டுமில்லாமல், பஞ்சாபி பாடகர்கள் கன்வர் க்ரேவால், தில்ஜந்த் தோசாந்த், ஹிமான்ஷு குரானா உள்ளிட்ட பிரபலங்கள்கூட கங்கனாவை வறுத்தெடுத்தனர். தவறான விவரங்கள் கொண்டு ட்வீட் போட்டதை அறிந்த கங்கனா, சில மணி நேரங்களில் தான் பகிர்ந்த புகைப்படத்தை நீக்கியும் உள்ளார்.
இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட மொஹிந்தர் கவுர் என்ற பாட்டி இதுகுறித்து, 'தி ட்ரிபியூன்' செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், 'அந்த நடிகைக்கு என்னை பற்றி என்ன தெரியும், என் வீட்டிற்கு வந்து என் வாழ்க்கையை பார்த்திருக்கிறாரா... ரூ.100 கொடுத்தால் நான் போராட்டத்துக்கு வருவேன் என அவர் எப்படி சொல்லலாம். என்னிடம் 12 ஏக்கர் நிலம் இருக்கிறது. என் வயல்களில் வேலைச் செய்யும் பணியாளர்களுக்கு 500 ரூபாய் நான் சம்பளம் கொடுத்து வருகிறேன். ஒரு விவசாயி என்ற முறையிலேயே நான் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். விவசாயம் என்பது மிகவும் கடினமான விஷயம். அது தெரியாமல் நடிகை இப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது' என பதிலடி கொடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்