சாப்பாட்டில் 'விஷம்' வைத்து... கொலை செய்ய 'திட்டம்' தீட்டும் தாவூத்?.... உச்சக்கட்ட பாதுகாப்பில் திகார் சிறை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉணவில் விஷம் வைத்து சோட்டா ராஜனை கொலை செய்ய தாவூத் இப்ராஹிம் குழு திட்டம் தீட்டுவதாக மத்திய உளவுப்பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் திகார் சிறையில் தற்போது பாதுகாப்பினை அதிகப்படுத்தி இருக்கின்றனர்.
தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜனை போலி பாஸ்போர்ட் வழக்கில் இந்தோனேசியா கைது செய்ய, அவரை இந்தியா கொண்டுவந்த மத்திய அரசு டெல்லி சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்ததை அடுத்து, திகார் சிறையில் அடைத்தது. கைது செய்யப்படுவதற்கு முன்பாக தாவூத் இப்ராஹிடம் இருந்து விலகியதால், இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. இதையடுத்து சோட்டா ராஜனை கொலை செய்ய தாவூத் கும்பல் பலமுறை முயற்சி செய்துள்ளது. எனினும் ஒவ்வொரு முறையும் நூலிழையில் அவர் தப்பிவிட்டார்.
இந்தநிலையில் திகார் சிறையில் அடைபட்டிருக்கும் சோட்டா ராஜனை கொலை செய்ய தாவூத் கும்பல் திட்டம் தீட்டிவருவதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சிறையில் தற்போது உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அவருக்கு சமையல் செய்யும் சமையல்காரர்களை இதுவரை 3 முறை மாற்றி இருக்கிறார்களாம். தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளியான ஷகீல் தொலைபேசி உரையாடல்களை உளவுத்துறை கேட்டுள்ளது. சோட்டா ராஜனுக்கு உணவில் விஷம் வைத்துக் கொல்லும்படி ஷகீல் யாருடனோ பேசியது தெரியவந்துள்ளது.
இதனால் அவருக்கு சமையல் செய்யும் நபர்கள் அந்த உணவை சாப்பிட்ட 10 நிமிடங்களுக்கு பின்பே சோட்டா ராஜனுக்கு அந்த உணவு வழங்கப்படுகிறதாம். மேலும் அவருக்கு அனுப்பப்படும் காய்கறிகள், எண்ணெய், மளிகை சாமான்கள் ஆகியவற்றையும் நன்கு பரிசோதித்த பின்னரே அனுப்பி வைக்கின்றனராம். உச்சக்கட்டமாக மருத்துவர்கள் அந்த உணவை பரிசோதித்த பின்னரே அவரை சாப்பிட அனுமதிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.