'இந்த நேரத்துல பெத்த பொண்ணு கூட இத செய்வாங்களான்னு தெரியல'... 'மாமா கெட்டியா பிடிச்சுக்கோங்க'... மொத்த பேரையும் நெகிழ வைத்த மருமகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பாதித்த மாமனாருக்காக, மருமகள் எடுத்த ரிஸ்க் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
சொந்த உறவுகளிடம் கூட தொட்டுப் பேச முடியாத ஒரு சூழ்நிலைக்கு கொரோனா தற்போது நம்மைத் தள்ளியுள்ளது. இந்த சூழ்நிலையிலும் மனிதம் இன்னும் மறைந்து போகவில்லை என்பதை இந்த சம்பவம் நினைவுபடுத்தியுள்ளது. அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வரும் துலேஷ்வர் தாஸுக்கு வயது 75. இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இவருக்கு சூரஜ் என்ற மகன் உள்ளார்.
அவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்று விட்ட நிலையில், அவரது மருமகள் நிகாரிகா வீட்டின் பொறுப்புகளை கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் மாமனாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வீட்டில் உதவிக்கு யாரும் இல்லை. அதே நேரத்தில் கொரோனா காரணமாக உதவிக்கும் யாரும் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அதே நேரத்தில் மாமனாரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவானது. இதையடுத்து தனது மாமனாருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற துடிப்புடன், கொரோனா பாதித்த தனது 75 வயது மாமனாரை தன்னுடைய முதுகில் சுமந்து நிகாரிகா அருகில் இருக்கும் ராஹா மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
இதனால் மருமகள் நிகாரிகாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் மாமனார் துலேஷ்வர் தாஸை மாவட்ட கோவிட் மருத்துவ மையத்துக்கு அனுப்புமாறு கூறினர். அதே வேளையில் மருமகள் நிகாரிகாவை வீட்டுத் தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கினர். ஆனால் மாமனாரைத் தனியே மருத்துவமனையில் விட மருமகள் நிகாரிகாவுக்கு மனம் வரவில்லை.
பின்னர் டாக்டர் சங்கீதா தார் மற்றும் சுகாதாரப் பணியாளர் பின்ட்டு ஹீரா ஆகியோர் இருவருக்கும் முதற்கட்ட சிகிச்சைகளை அளித்து பிறகு 108 ஆம்புலன்ஸில் மாமனார், மருமகள் இருவரையும் கொரோனாவுக்கான அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.
கொரோனா அச்சத்தில் புல்டோசரில் இறந்த தந்தையின் உடலை ஏதோ குப்பை கூளம் போல் கொண்டு சென்ற மகன்கள் இருக்க, தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று மாமனாரைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்துடன், அவரை தோளில் சுமந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற மருமகள் நிகாரிகாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்