'Sorry, எனக்கு இன்னொரு மீட்டிங் இருக்கு'... 'காத்திருந்த பிரதமர்'... 'அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மம்தா'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாயாஷ் புயல் பாதிப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது.
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது. யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மேற்கு வங்காளத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய அரசு தரப்பில் மேற்கு வங்காள ஆளுநர் ஜக்தீப் தங்கர் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர். மாநில அரசு தரப்பில் மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது.
ஆனால், ஆய்வுக்கூட்டம் நடைபெறும் அறைக்குப் பிரதமர் மோடி, ஆளுநர் ஜக்தீப் மற்றும் மத்திய அரசின் பிற அதிகாரிகள் அனைவரும் திட்டமிட்ட நேரத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஆனால், அந்த கூட்டத்திற்கு மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, தலைமைச் செயலாளர் மற்றும் மாநில அரசு சார்பில் பங்கேற்க வேண்டிய அதிகாரிகள் மிகவும் காலதாமதமாக வந்தனர்.
மம்தா பானர்ஜி மற்றும் மாநிலத் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கூட்டம் நடைபெற்றும் அலுவலகத்திலேயே இருந்த போதும் அந்த அறைக்கு வரவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் காலதாமதத்திற்குப் பின்னர் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசு தரப்பினர் கூட்டம் நடைபெறும் அறைக்கு வந்தனர். பின்னர் 15 நிமிடங்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்ற மம்தா, தான் கொண்டுவந்த புயல் பாதிப்பு தொடர்பான தரவுகள் மற்றும் விவரங்களைப் பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
பின்னர் வேறு சில கூட்டங்களில் பங்கேற்பதால் இந்த கூட்டத்திலிருந்து வெளியேறுவதாகப் பிரதமர் மோடியிடம் கூறிய மம்தா பானர்ஜி கூட்டம் நடைபெறவிருந்த அறையை விட்டு வெளியேறினார். மம்தா பானர்ஜியுடன் சேர்த்து தலைமைச் செயலாளர் மற்றும் மாநில அரசு அதிகாரிகளும் வெளியேறினர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்