‘ஒருமாத ஊரடங்கால் என்ன நடந்தது?’... ‘ஆனாலும் அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்’... ‘நாட்டிலேயே இங்கு தான் குறைவு’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் ஊரடங்கும், கட்டுப்பாடுகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால் கொரோனா அதிகரிப்பு விகிதம் வெகுவாக சரிந்து தற்போது 8.1 சதவீதமாக குறைந்திருக்கிறது.

‘ஒருமாத ஊரடங்கால் என்ன நடந்தது?’... ‘ஆனாலும் அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்’... ‘நாட்டிலேயே இங்கு தான் குறைவு’!

நாடு முழுவதும் கடந்த மாதம் 24-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு மாதம் முடிந்து விட்டது. இந்த ஒரு மாத காலத்தில் நோய் அதிகரிப்பு விகிதம் குறைந்துவிட்டதா என்றால் ஆம்.  வெகுவாக குறைந்திருக்றிது. அதாவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட அன்று நாடு முழுவதும் 500 நோயாளிகள் இருந்தனர். அப்போது ஒவ்வொரு நாளும் அதன் அதிகரிப்பு விகிதம் 21.6 சதவீதமாக இருந்தது.

ஊரடங்கும், கட்டுப்பாடுகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால் அதிகரிப்பு விகிதம் வெகுவாக சரிந்து தற்போது 8.1 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஆனாலும் கூட சில நாடுகளை ஒப்பிடும்போது நோய் அதிகரிப்பு விகிதம் இந்தியாவில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஜெர்மனியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு பிறகு அதிகரிப்பு விகிதம் 2 சதவீதமாகவும், அமெரிக்காவில் அதிகரிப்பு  விகிதம் 4.8 சதவீதமாகவும் உள்ளன. ஆனால் இந்தியாவில் 8.1 சதவீதமாக இருக்கிறது.

இப்போதைய அதிகரிப்பு விகிதத்தின்படி கணக்கிட்டு பார்த்தால் அடுத்த வாரம் இறுதியில் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. அடுத்த 2 வாரத்தில் 70 ஆயிரம் பேரும், மே மாதம் இறுதியில் 2.5 லட்சம் பேரும், பாதிக்கப்பட இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் நோயாளிகள் எண்ணிக்கை 4 நாட்களில் 2 மடங்காக அதிகரித்தது. அது இப்போது குறைந்து 10 நாட்களில் 2 மடங்கு ஆகிறது. இதுபற்றி மத்திய அரசு அமைத்துள்ள கொரோனா நடவடிக்கை குழு தலைவர் வி.கே. பால் கூறும்போது,

‘இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. உரிய நேரத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வராவிட்டால் இன்று நோயாளிகள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி இருக்கும். ஊரடங்கு காரணமாக ஏப்ரல் 6-ந் தேதிக்கு பிறகு நோய் பரவுதல் குறையத் தொடங்கியது. எனினும் மே மாதம் மத்தியில் வரை இதன் அதிகரிப்பு விகிதம் நீடிக்கலாம்’ என்று கூறினார். நாட்டிலேயே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரள மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அங்கு அதிகரிப்பு விகிதம் 1.8 சதவீதமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.