நாட்டிலேயே 'இங்குதான்' குணமடைந்தவர்கள் அதிகம்... 'உயிரிழப்பு' விகிதம் குறைவு... சுகாதாரத்துறை அதிகாரி 'பகிர்ந்த' காரணம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில் தான் கொரோனாவால் பாதிக்கட்டவர்களில் அதிகம் பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டிலேயே முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இடமான கேரளாவில் தான் தற்போது வைரஸ் பாதிப்பிலிருந்து அதிகம் பேர் குணமடைந்துள்ளனர். இங்குதான் குறைவான இறப்பு விகிதமும் உள்ளது. கேரளாவில் வைரஸ் பாதித்த முதல் 25 பேரில் 85 சதவீதம் பேர் தற்போது குணமடைந்துள்ளனர். மேலும் அங்கு முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஜனவரி 30ஆம் தேதியிலிருந்து தற்போது வரை பாதிக்கப்பட்ட 314 பேரில் 17 சதவீதம் குணமடைந்துள்ளனர். அதே வேளையில், நேற்றைய நிலவரப்படி கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிராவில் 35 பேரும் (5.5%), டெல்லியில் 18 பேரும் (4.04%) குணமடைந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை வரை கண்ணூரில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட 52 பேரில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களின் இளைஞர்களே அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் அங்கு அவசர சிகிச்சை பிரிவிலும் யாருமே இல்லை என கண்ணூர் மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, ராஜஸ்தானிற்கு அடுத்தப்படியாக கேரளாவில் தான் 9,744 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்துப் பேசியுள்ள மூத்த சுகாதாரத்துறை அதிகாரி, "ஜனவரிக்கு பிறகு நாங்கள் மிகவும் திட்டமிட்ட சிகிச்சை வழிமுறைகளை பின்பற்றுகிறோம். வைரஸ் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவு அளிப்பதுடன், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதவாறு கவுன்சிலிங் கொடுக்கிறோம். இதன் காரணமாகவே விரைவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.