'வெங்காய சந்தையில் பரவிய கொரோனா வைரஸ்...' 'உள்ள இருக்குறவங்க யாருமே வெளிய வரக்கூடாது...' முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையில் கொரோனா வைரஸ் பரவியதாக வெளிவந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெங்காய விலை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய வர்த்தக சந்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மார்க்கெட் ஆகும். இந்த பகுதியிலிருந்து தான் நாடு முழுவதும் வெங்காய மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் நாசிக் மார்க்கெட்டில் இருப்பவர்களுக்கு ரொட்டி சப்ளை செய்த நபருக்கு, கடந்த மார்ச் 30 தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவரும் அம்மாநில சுகாதாரதுறை, நாசிக் மார்க்கெட்டிலிருந்து வெங்காய மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.
மேலும் அப்பகுதியை சுற்றி இருக்கும் கிராம பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கிருக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் முழுவீச்சோடு இறங்கியுள்ளது மருத்துவகுழு. மேலும் நாசிக் மார்க்கெட்டின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தே மக்கள் இங்கு தினக்கூலிகளாக வேலைக்கு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மார்க்கெட்டுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உள்ளே இருக்கும் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வெங்காய விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு இருக்கும் அனைவருக்கும் பரிசோதனைகள் முடிந்த பின்னரே அப்பகுதியில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு அனுப்ப அனுமதி கொடுக்கப்படும் என சந்தையில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மிக பெரிய வெங்காய சந்தையான இப்பகுதியில், கொரோனா வைரஸ் தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டதால், இங்கிருந்து நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் வெங்காய மூட்டைகள் மீது அரசு தனி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இதனால் வெங்காய விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.