'உன்னோட உயிரை பத்தி நெனச்சு கூட பாக்கலையே மா'... 'அசந்து போக வைத்த கேரள மாணவி'... நெகிழ வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா மனித இனத்தைப் புரட்டிப் போட்டிருக்கும் இந்த நேரத்திலும், மனிதம் இன்னும் இறந்து போகவில்லை என பலரும் நிரூபித்து வருகிறார்கள். அந்த வகையில் கேரள மாணவியின் சேவையைப் பார்த்து ஆஸ்திரேலிய அரசு நெகிழ்ந்து போயுள்ளது.

'உன்னோட உயிரை பத்தி நெனச்சு கூட பாக்கலையே மா'... 'அசந்து போக வைத்த கேரள மாணவி'... நெகிழ வைக்கும் சம்பவம்!

கேரளாவின், கோட்டயம் மாவட்டம் கருப்பந்துரா பகுதியைச் சேர்ந்த தம்பதி லல்லிசென் மல்லிசேரி-ஆன்சி பிலிப். இவர்களுடைய மகள் ஷேரன் வர்கீஸ். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்குப் படிக்கச் சென்றார். அங்குள்ள வொல்லன்காங்க் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நர்ஸிங் படிப்பை முடித்த, இவர் அதன் பின் அங்கு அவருக்குச் செவிலியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை மறுத்த அவர், அங்குள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதனால் ஆஸ்திரேலிய அரசு, முதியோர் வசிக்கும் இடங்களில் கூடுதல் அக்கறை எடுத்து கொரோனா நோய்த்தொற்று பரவாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது. அப்போது முதியோர் இல்லத்தில் சேவை செய்து வந்த ஷேரன், மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார். இந்த ஆபத்தான பணியில் தன்னுடைய உயிரைக் குறித்துக் கூட கவலைப்படாமல், முதியோர் இல்லத்தில் தங்கியிருந்து தங்கியிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவிகளைச் செய்துவந்தார்.

ஷேரனின் தீவிரமான நடவடிக்கையால் நோய்த்தொற்று ஏற்படாமல் அனைவரையும் பாதுகாத்தார். இதனிடையே ஆஸ்திரேலியாவின் வர்த்தகம், கல்வி மற்றும் முதலீட்டுக்கான அரசு அமைப்பான ஆஸ்டிரேட், கொரோனா தடுப்புப் பணிகளைச் சர்வதேச சமூகத்தினர் மேற்கொண்ட விதம் குறித்து வீடியோ வெளியிடுமாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதில் பேசிய ஷேரன் வர்கீஸ், ''கிரீன்ஹெல் மேனர் முதியோர் இல்லத்தில் கொரோனா வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். ஷிப்ட் முறையில் பணிக்கு வருபவர்களின் உடை மூலம் கிருமி வந்துவிடக் கூடாது என்பதற்காக, உள்ளே நுழையும் இடத்திலேயே துணிகளை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்தோம். மேலும் முதியோரின் உறவினர்கள் ஆரம்பத்தில் அவர்களைப் பார்க்க அனுமதித்தோம். பின்னர் கொரோனா தொற்று அதிகமான நேரத்தில், முதியோரைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் கொரோனா வராமல் தவிர்க்கப்பட்டது'' எனக் கூறினார்.

ஷேரன் வர்கீஸின் சேவையை வெகுவாக ஆஸ்டிரேட் அமைப்பு வெகுவாக பாராட்டிய நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அவரை வாழ்த்திப் பேசியுள்ளார். அதில், ''உங்களின் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துகள், ஷேரன். இந்தியாவிலிருந்து கல்விக்காக வந்த நீங்கள், வயதான மக்களுக்கு உரிய நேரத்தில் செய்திருக்கும் உதவி மகத்தானது. இந்த உதவி மூலம் உங்களின் பெற்றோருக்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்துள்ளீர்கள்'' எனப் பாராட்டிப் பேசியுள்ளார். 

கில்கிறிஸ்டின் பாராட்டால் திக்குமுக்காடி போன ஷேரன் வர்கீஸ், ''ஆடம் கில்கிறிஸ்ட் என்னைப் பாராட்டியிருப்பது என் தந்தைக்கு மட்டுமல்லாமல் தாய்க்கும் பெருமையாக இருக்கிறது. எனது தந்தை தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதால், அவர் நிச்சயம் பெருமை அடைவார்'' எனப் பெருமிதத்துடன் கூறியுள்ளார். தன்னுடைய பாதுகாப்பு குறித்து சிறிதும் கவலைப்படாமல், ஒரு முதியவருக்குக் கூட கொரோனா வராமல் பார்த்துக்கொண்டு ஷேரன் வர்கீஸுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மற்ற செய்திகள்