“ஊரடங்கு டைம்ல இப்படியா பண்ணுவ?”.. ‘கொரோனா சூழலில் தம்பி செய்த காரியம்!’.. ‘ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூரம்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தவின்போது வீட்டை விட்டு வெளியே சென்றதால் ஆத்திரத்தில் அண்ணன் ஒருவர் தம்பியை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்தவர் துர்கேஷ்(24). இவர் புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அங்கு கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து மும்பைக்கு திரும்பியுள்ளார். இதனிடையே நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாகவும், சமூகத்திலிருந்து விலகி இருத்தல் என்னும் முறையைக் கையாளும் விதமாகவும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் மும்பையில் நேற்று முன்தினம் துர்கேஷ் தனது வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனை அறிந்த துர்கேஷின் அண்ணன் ராஜேஷ் (28) ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாகவும் அதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் தம்பிக்கு அறிவுறுத்தியதோடு எச்சரித்துமுள்ளார். ஆனால் அண்ணனின் சொல் கேளாமலும், அதை பொருட்படுத்தாமலும், மீண்டும் துர்கேஷ் வெளியே சென்றதாக தெரிகிறது. வெளியே சென்ற வாலிபர் துர்கேஷ் வெளியே சுற்றிவிட்டு இரவுதான் வீடு திரும்பியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ராஜேஷ், ஊரடங்கு இருக்கும் வேளையில் எதற்காக வெளியே சென்றாய் என்று தம்பி துர்கேஷை கண்டிக்க, அவரது தம்பி துர்கேஷூம் பதிலுக்கு பதில் பேச இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த ராஜேஷ் கூர்மையான ஆயுதம் ஒன்றை எடுத்து தனது தம்பி என்றும் பாராமல் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த துர்கேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாம்தா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.