'உடல்நிலை சரியில்லாத தந்தை'... 'எப்படியாவது' திருமணத்தை முடிக்க திட்டமிட்டு... லாக்டவுனில் 'இளைஞர்' செய்த 'அதிர்ச்சி' காரியம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேசத்தில் ஒருவர் தன் திருமணத்திற்காக தந்தையை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்று நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களிலும் திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் தடைபட்டுள்ளன. ஒரு சிலர் குறைந்த அளவிலான உறவினர்களுடன் எளிமையான முறையில் திருமணங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆம்புலன்சில் டெல்லி சென்று திருமணம் செய்து திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகரைச் சேர்ந்த அகமது என்ற அந்த இளைஞருக்கு டெல்லியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்துள்ளது. இதையடுத்து ஊரடங்கால் திருமணம் தடைபடக் கூடாதென யோசித்த அவர் அதற்கென திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதன்படி, தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஆம்புலஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்த அவர் அதனுள்ளே தந்தைக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்படுவதுபோல ஏற்பாடு செய்து வெற்றிகரமாக டெல்லி சென்றுள்ளார்.
அதன்பிறகு அங்கு திருமணத்தை முடித்துக்கொண்டு அதே ஆம்புலன்சில் அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அகமதுவை போலீசார் விசாரித்ததில் நடந்த அனைத்தும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன் குடும்பத்தினர் அனைவரையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.