'சொந்த ஊருக்கு வர வேண்டாம்... ஒருவருக்கு ரூ 10,000'... புதிய பாதிப்பைத் தடுக்க... 'அதிரடி' திட்டத்தை அறிவித்துள்ள 'மாநிலம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாவடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தற்போது ஒருவருக்கு கூட கொரோனா இல்லாத நிலையில், இனி புதிய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அம்மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, வெளி மாநிலங்களில் சிக்கியுள்ளவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்மூலம் பலரும் சொந்த ஊர் திரும்புவதால் அவர்கள் மூலமாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு பரவலாமென்ற அச்சம் நாகாலாந்தில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப வேண்டாம் எனவும், தற்போது வசிக்கும் இடத்திலேயே இருக்குமாறும் அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள நாகாலாந்து தலைமை செயலாளர் தெம்ஜென் டாய், "கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக நாகாலாந்தை தக்க வைப்பது சவாலாக உள்ளது. அதனால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் மூத்த குடிமக்கள், சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள், மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளோம். மாநில அரசின் இணையதளத்தில் சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்து தற்போது வரை 18,000க்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து வெளிமாநிலங்களில் உள்ள நாகாலாந்தைச் சேர்ந்தவர்களை அங்கேயே இருக்குமாறு கூறியுள்ளோம். அவர்களுக்கு தலா ரூ 10,000 பணமும் அளிக்கவுள்ளோம்.
அதேசமயம் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த, சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து மாநிலத்திற்கு தற்போது யாரையும் திரும்ப வரவழைக்க வேண்டாமெனவும், தவிர்க்க முடியாத சூழலில் உள்ளவர்களை மட்டும் அழைத்து வர வேண்டுமெனவும் பல தொண்டு நிறுவனங்களும், பழங்குடியின குழுக்களும், சமூக அமைப்புகளும் கேட்டுக் கொண்டுள்ளன. அதனால் கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.