'அந்த 1 ரூபாய் ஃபீஸ்?'.. 'எப்ப வந்து வாங்கிக்கிறீங்க?'.. சுஷ்மா' கடைசி போன் கால் .. உருகும் 'வழக்கறிஞர்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானதால், நாடே துயரத்தில் உள்ளது. அவருக்கு அகில இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, உலக அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
67 வயதான சுஷ்மா ஸ்வராஜ், திடீரென மாரடைப்பு காரணமாக, நேற்றைய தினம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் வருகின்றனர்.
இந்த நிலையில், இறப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாக, சுஷ்மா தன்னுடன் பேசிய உருக்கமான பேச்சினை வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே பகிர்ந்துள்ளார். அதன்படி, ‘நா ன் செவ்வாய் இரவு 8.50க்கு சுஷ்மா ஸ்வராஜ்க்கு போன் செய்தபோது, "நான் உங்களுடையா ஃபீஸ் 1 ரூபாயை தரவேண்டுமே? எப்ப வந்து வாங்கிக்கிறீங்க?" எனறு அவர் கேட்டார். நானோ, புதன் கிழமை மாலை 6 மணிக்கு வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறியிருந்தேன்’ என்று வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு பாகிஸ்தான் தூக்குத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தொடர்ந்த வழக்கில் சுஷ்மாவின் பரிந்துரையின் பேரால் 1 ரூபாய் சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு ஆஜரானவர்தான் வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே. அதன் பிறகு பாகிஸ்தான் விதித்த தண்டனையை மறு பரிசீலனை செய்ய சர்வதேச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
அந்த 1 ரூபாய் கட்டணத்தையே சுஷ்மா, தன்னை வந்து பெற்றுக்கொள்ளுமாறு விளையாட்டாக சொன்னதாக ஹாரிஸ் சால்வே உருக்கமாகக் கூறியுள்ளார்.