‘எல்லோரையும் சமமா நடத்துங்க’... ‘வழிகாட்டுதல்களில் எல்லையை தாண்டுறீங்க’... ‘இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅந்நிய முதலீடு மீது இந்தியா கொண்டு வந்து இருக்கும் புதிய விதிகள் உலக வர்த்தக மையத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து மீண்டு இருக்கும் சீனா பல்வேறு நாடுகளில் முதலீடுகளை செய்யத் துவங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் பொருளாதார தேக்க நிலையை பயன்படுத்தி, அதனை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள சீனா நினைத்தது. அதன்படி கொரோனா தொற்றால் பங்கு விலை சரிந்ததை பயன்படுத்தி தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகளை சமீபத்தில் சீன மத்திய மக்கள் வங்கி வாங்கி இருந்தது.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட மத்திய அரசு, கடந்த சனிக்கிழமை அன்று அந்நிய முதலீட்டு விதிகளில் (Foreign Direct Investments) சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி, இந்தியாவுடன் எல்லைகள் பகிர்ந்து கொண்டு இருக்கும் (சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மியான்மார்) எந்த நாடும் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினால், மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்று திருத்தியது. இதன்படி, குறிப்பாக இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமானால் மத்திய அரசின் அனுமதியை சீனா பெற வேண்டும்.
இதனால், கோபம் அடைந்து இருக்கும் சீனா, ''பாரபட்சமான முறையில் இந்தியா திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அந்நிய முதலீடு மீது இந்தியா கொண்டு வந்து இருக்கும் புதிய விதிகள் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது. பாரபட்சமான நடைமுறைகளை திருத்தி, அனைத்து நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளையும் ஒரே மாதிரி நடத்தி, நியாயமான, சமமான வர்த்தக சூழலை உருவாக்கும் என்று நம்புகிறோம்'' என்று சீனா தெரிவித்துள்ளது.