‘இன்ஜினியரிங்’, மருத்துவ மாணவர்களே ‘டார்கெட்’... ‘பெற்றோருக்கு’ வந்த ‘பதறவைக்கும்’ போன் கால்... ‘சென்னை’ கல்லூரிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த கும்பல்...
முகப்பு > செய்திகள் > இந்தியாசென்னை போலீசாரிடம் சிக்கிய மோசடி கும்பல் ஒன்றிடமிருந்து பணத்திற்காக செல்போன் நம்பர் போன்றவற்றை விற்கும் டேட்டா டீம் குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னையில் உள்ள பிரபலமான தனியார் இன்ஜினியரிங், மருத்துவக்கல்லூரி விடுதிகளில் தங்கிப் படித்துவரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பலருக்கு கல்லூரியிலிருந்து பேசுவதாகக் கூறி அடிக்கடி போன் அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசியவர்கள், கல்லூரி கட்டணத்தை உயர்த்தியுள்ளோம், புதிய வங்கிக் கணக்கு குறித்த விவரத்தை மெசேஜ் செய்துள்ளோம், அதில் கட்டணத்தை செலுத்துங்கள் எனவும், உங்கள் மகன் அல்லது மகள் விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார், உடனே புறப்பட்டு வாருங்கள் எனவும் கூறியுள்ளனர். இந்த போன் அழைப்புகளால் பதறிப்போன பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டபோது, பெற்றோர்கள் கூறியதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசாரிடம் இதுகுறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர்கள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பேசியுள்ள போலீசார், “கல்லூரி நிர்வாகமும் பெற்றோரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் குறிப்பிட்ட செல்போன் நம்பர்களை ஆய்வு செய்தபோது, அவற்றை யாரும் கண்டறிய முடியாத அளவிற்கு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் சில செல்போன் நம்பர்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. பின்னர் சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் அந்த செல்போன் அழைப்புகள் பெங்களூருவிலிருந்து வந்ததைக் கண்டறிந்தோம்.
இதையடுத்து சென்னை போலீசார், கர்நாடக மாநில சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தினோம். அதில், பெங்களூருவில் பிஎஸ்என்எல் சிம்கார்டு ஏஜென்ட்டாக உள்ள செந்தில்குமார் என்பவரே அந்த சிம்கார்டுகளை விநியோகித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரைக் கைது செய்து விசாரித்தபோது அவர் அளித்த தகவலின்படி சிம்கார்டுகளை வாங்கிய சேக் அகமது (28) என்பரைப் பிடித்தோம். பின்னர் அவர் மூலமாக, கேரளாவைச் சேர்ந்த சாதிக், லத்தீப் ஆகியோரைப் பிடித்தோம். சாதிக், லத்தீப் மற்றும் இந்தக் கும்பலின் தலைவனான சபீர் ஆகிய 3 பேர்தான் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் போனில் பேசியுள்ளனர்.
கேரளாவிலிருந்தபடியே இந்தக் கும்பல் அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் கூறுவதுபோல தவறான தகவல்களைத் தெரிவித்து பீதியை ஏற்படுத்திவந்துள்ளது. தற்போது சபீர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர் சிக்கினால்தான் இந்தக் கும்பலின் நோக்கம் என்னவென்று தெரியவரும். இந்தக் கும்பல் கடந்த 5 ஆண்டுகளாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். இவர்களிடமிருந்து சிம்கார்டுகள், செல்போன், சொகுசு கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். மேலும் 1000 ரூபாய் கொடுத்தால் 10,0000 செல்போன் நம்பர்களைக் கொடுப்பார்கள் எனக் கைதானவர்கள் கூறியுள்ளனர். இந்தக் கும்பலுக்கு டேட்டாக்களை விற்றவர்கள் குறித்தும் விசாரித்துவருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.