‘ஸ்டிக்கரில் பின்லேடன்.. ரிஜிஸ்ட்ரேஷனோ மேற்குவங்கம்’.. கொல்லம் போலீஸை குழப்பிய கார்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் ஒசாமா பின்லேடன் படம் ஒட்டிய ஸ்டிக்கருடன் சுற்றிய காரால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

‘ஸ்டிக்கரில் பின்லேடன்.. ரிஜிஸ்ட்ரேஷனோ மேற்குவங்கம்’.. கொல்லம் போலீஸை குழப்பிய கார்!

கொல்லம் இரவிபுரம் பகுதியில் ஒசாமா பின்லேடன் உருவம் பொறித்த ஸ்டிக்கருடன், மேற்கு வங்காளம் மாவட்டத்தின் பதிவு எண்ணைக் கொண்ட ஒரு கார் சுற்றிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அளித்தவர்களில் ஒருவர், தனது செல்போனில் அந்த காரைப் படம் பிடித்து இரவிபுரம் காவல் நிலையத்துக்கு அனுப்பி இருந்தார். அந்தக் காரில் 3 பேர் பயணிப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

மேலும், அந்த கார் மேற்குவங்க மாநிலப் பதிவெண் கொண்டிருந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் விரைவாக செயலாற்றிய போலீஸார், அந்தக் காரை சுற்றிவளைத்தனர். காரில் பயணித்தவர்களைக் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில், கொல்லத்தின் பள்ளிமுக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அந்தக் காரை வாடகைக்கு எடுத்ததாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

திருமண விழா ஒன்றுக்காக காரை வாடகைக்கு எடுத்ததாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்குறித்து விசாரித்ததில், அந்தக் காருக்கு சொந்தக்காரர் பள்ளிமுக்கு பகுதியை அடுத்த முண்டக்கல்லைச் சேர்ந்த நாசர் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில், மேற்குவங்க மாநிலத்தில் அந்தக் காரை கடந்த ஓராண்டுக்கு முன்னர் வாங்கியதாகவும், ஒசாமா பின்லேடன் ஸ்டிக்கரை சமீபத்தில் ஒட்டியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அதேநேரம், கேரளாவுக்குக் கொண்டுவரப்பட்ட அந்த காருக்கு மாநில போக்குவரத்துத் துறையிடம் இருந்து தடையில்லாச் சான்று (என்.ஓ.சி.) பெறாதது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, அந்த நபரை போலீஸார் விடுவித்திருக்கிறார்கள். வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்றாலும், தேவைப்படும் நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சொல்லி நாசரை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

கேரளாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மிகபெரிய தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லம் நகரில் ஒசாமா பின் லேடன் படத்துடன் சுற்றிய காரால் பரபரப்பு ஏற்பட்டது.

CARSEIZED, OSAMABINLADEN, STICKER, KOLLAM