'கடல் அலையில் மாட்டிக்கொண்ட கார்'... 'தத்தளித்த கார் ஓனர்'... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிர மாநிலத்தில் கடல் அலைகளில், கார் அடித்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் சனிக்கிழமையன்று துவங்கியது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அரபிக் கடலின் தென்கிழக்கே, லட்சத் தீவுகள் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது வலுபெற்று காற்றழுத்த மண்டலமாக மாறி, அதன்பின்னர் புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அரபிக் கடலை ஒட்டிய மகாராஷ்டிரா மாநிலத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் கடற்கரையோரத்தில் சிலர் கடற்கரைக்கு காரில் வந்தனர். அவர்கள் கடலை ஒட்டிய மணற்பரப்பில் காரை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், கடல் மணலில் கார் சிக்கி கொண்டது. இதனால் செய்வதறியாது திகைத்த காரை ஓட்டி வந்த நபர், உடனடியாக கீழிறங்கி காரை தள்ள முயன்றார். ஆனால் அலைகளின் தாக்கம் அதிகமிருந்ததால், கார் அலைகளின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டது.
இதனிடையே கடல் அலைகளுக்கிடையே கார் தத்தளிப்பதும், அதன் உரிமையாளர்கள் பதற்றத்துடன் காரைச் சுற்றி ஓடுவதும், காப்பாற்ற முயற்சிப்பதுமான காட்சிகள் அங்கிருந்தவர்களால் படம்பிடிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது தற்போது வைரலாகி வருகிறது.
#WATCH A car gets stuck in sand and is lashed by waves, at a beach in Palgarh (10 June). #Maharashtra pic.twitter.com/x0KuZ8ibQE
— ANI (@ANI) June 10, 2019