'எங்களுக்கு நல்ல நியூ இயர் இல்ல'... 'கழுத்தை நெரித்த கடன்'... காருக்குள் 'தொழிலதிபர்' செய்த கோரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாருக்குள் மனைவி மற்றும் மகளை சுட்டுக்கொன்று தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் யமுனா நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கார் ஒன்று தனியாக நின்று கொண்டிருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்ததால், காவல்துறையினர் தொடர்ச்சியாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சாலை ஓரத்தில் கார் ஒன்று ரொம்ப நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் காரின் அருகே சென்று பார்த்தனர். அப்போது காரின் உள்ளே ஒரு குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கார் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது காருக்குள் ஒரு சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். உடனடியாக அவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கவலைக்கிடமான நிலையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்பமே சிதைந்து போன நிலையில், அவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.
அப்போது விசாரணையில் இறந்தவர்கள் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் நீரஜ் அகர்வால், அவரது மனைவி நேகா, மகள் தன்யா என்பது தெரிய வந்தது. படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடியது நீரஜின் மகன் சூர்யா என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. புத்தாண்டு கொண்டாடுவதற்காக நீரஜ் அகர்வால் தனது குடும்பத்தினருடன் காரில் வந்தபோது மனைவி, மகன், மகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நீரஜ்அகர்வால் வங்கி கணக்கில் ரூ.123 கோடி பணபரிவர்த்தனை நடந்துள்ளது. இது தொடர்பாக நீரஜ்அகர்வாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பலமுறை விசாரணை நடத்தினர். இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அவருக்கு தொழிலிலும், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் வருமான வரித்துறை மட்டுமல்லாது பொருளாதாரக் குற்றப் பிரிவு, வணிக வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை என அடுத்தடுத்து பல்வேறு துறையினரும் நீரஜ்அகர்வாலிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனால் புத்தாண்டு கொண்டாடலாம் என குடும்பத்தை அழைத்து வந்து, அவர்களை கொலை செய்து விட்டு, நீரஜ் அகர்வால் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளார்கள். புத்தாண்டு பிறந்த நிலையில் ஒரு குடும்பமே சிதைந்து போன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.