அதெல்லாம் 'ஒண்ணும்' ஆகாது... 11 பேர் கூட்டாக 'தற்கொலை' செய்த வீட்டில்... 'தில்லாக' குடியேறிய டாக்டர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி டெல்லியில் உள்ள புராரி என்னும் பகுதியில் 11 பேர் கூட்டாக தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் மொத்தமாக அதிரவைத்தது. கடைசியில் சடங்கின்போது ஏற்பட்ட விபத்தில் அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.
இதைத்தொடர்ந்து அந்த வீடு ராஜஸ்தானில் வசிக்கும் அந்த குடும்பத்தின் மூத்த வாரிசு ராஜேஷ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தற்கொலை செய்து கொண்டதால் அந்த வீட்டுக்கு யாரும் குடிபுக முன்வரவில்லை. வீட்டையும் விற்க முடியவில்லை. இதற்காக ராஜேஷ் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இந்தநிலையில் ராஜேஷின் வீட்டிற்கு தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. அந்த வீட்டிற்கு மோகன் என்னும் மருத்துவர் 25 ஆயிரம் வாடகை கொடுத்து குடியேறி இருக்கிறார். மேலும் அந்த வீட்டை மருத்துவ பரிசோதனை மையமாகவும் மாற்றியிருக்கிறார்.
இதுகுறித்து மோகன், '' மூட நம்பிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. 11 பேரும் தற்கொலை செய்துகொண்ட பிறகு, இந்த வீடு குறித்து மக்கள் பல்வேறு வதந்திகளைக் கிளப்பி வருகின்றனர். அந்த வீட்டருகே தான் நான் ஏற்கெனவே மருத்துவமனை நடத்தி வந்தேன்.இங்கு நடந்த விஷயங்கள் அனைத்தும் என்னுடைய குழந்தைகளுக்கும் தெரியும். அவர்கள் என்னை தடுக்கவில்லை. என்னை பார்க்க வரும் நோயாளிகள் யாரும் பயப்படத் தேவையில்லை. வீட்டில் தேவையான மாற்றங்களைச் செய்து எங்கள் குடும்பம் மகிழ்ச்சியுடன் வாழும்,'' என தெரிவித்துள்ளார்.