Bulli Bai ஆப் விவகாரம்.. ‘உங்க அம்மாவே வெட்கப்படுவாங்க’.. PhonePe நிறுவனத்தின் CEO கடும் கண்டனம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுள்ளி பாய் மொபைல் செயலியை வடிவமைத்தவர்களை போன்பே சிஇஓ கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
ஆன்லைன் இணையதளமான ‘புள்ளி பாய்’ (Bulli Bai) எனும் செயலியில் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தன்னுடைய புகைப்படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாக கூறி, அதற்குரிய ஆதாரங்களுடன் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘புள்ளி பாய் இணையதளத்தை என்னை பற்றிய தவறான, ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் ஆபாசமான சூழலில் எனது படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு உடனடியாக நடவடிக்கை தேவை. ஏனெனில் இது என்னையும் இதுபோல் இருக்கும் மற்ற சுதந்திரமான பெண்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை துன்புறுத்துவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது’ என புகாரில் குறிப்பிட்டிருந்தார் இதனை அடுத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல் துறையும் பதிலளித்து இருந்தது.
இதனை அடுத்து உத்தரகாண்ட்டை சேர்ந்த பெண் ஒருவரையும், பெங்களூருவைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் விஷால் குமார் (வயது 21) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போன்பே (PhonePe) செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நிகம் தனது டுவிட்டர் பக்கத்தில் புள்ளி பாய் செயலியை உருவாக்கியவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
#BulliBaiApp creators should be put behind bars for life. Shame on you - whoever you are! Your own mother's would be ashamed of having given birth to you today 👿
— Sameer.Nigam (@_sameernigam) January 3, 2022
அதில், ‘புள்ளி பாய் மொபைல் செயலியை உருவாக்கியவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை கொடுக்க வேண்டும். நீங்கள் யாராக இருந்தாலும் இந்த செயலுக்காக வெட்கித் தலைகுனிய வேண்டும். உங்களை பெற்றதற்காக உங்கள் தாய் வெட்கப்படுவார்’ என சமீர் நிகம் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்